தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைக் கண்டித்து நாடு முழுவதும் நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் போராட்டங்களை அடக்குவதற்ககாக நாட்டின் பாதுகாப்பு இயந்திரங்கள் முழு வீச்சில் களமிறக்கப்பட்டுள்ளன. குடிமக்களின் அடிப்படை வாக்காளர் உரிமைகள் கேள்விக்குறியாகியுள்ள இந்தப் பிரச்சினை குறித்து, ஆளும் தரப்பிலிருந்து எந்தவொரு அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையும் இதுவரை முன்வைக்கப்படவில்லை.


காங்கிரஸ் தலைவர்கள் மீது எப்.ஐ.ஆர் (FIR) வழக்குகள் பதிவு
நாடாளுமன்றத்தின் ‘இந்தியா’ (INDIA) கூட்டணி உறுப்பினர்கள் கடந்த செவ்வாய்கிழமை (அக்.6) மற்றும் புதன்கிழமை (அக்.7) ஆகிய இரு நாட்களிலும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணைய அலுவலகம் மற்றும் ஜந்தர் மந்தர் நோக்கிச் செல்ல முயன்ற அவர்கள் ஒவ்வொரு முறையும் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தில்லி காவல்துறையின் இந்தப் போக்கிற்கு எதிராக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதே காவல்துறை வழக்குகளைப் பாய்ந்துள்ளது. குறிப்பாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வாத்ரா மீது இரண்டு எப்.ஐ.ஆர் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதலாவது வழக்கு, புதன்கிழமையன்று ஆகாசவாணி பவன் வளாகத்திற்குள் ‘அத்துமீறி நுழைந்ததாக’ பதியப்பட்டுள்ளது.
இரண்டாவது வழக்கு, புதன்கிழமையன்று தில்லியின் விண்ட்சர் சர்க்கிள் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினரைத் தாக்கியதாகவும், அரசுப் பணியைத் தடுத்ததாகவும் கூறி வியாழக்கிழமை காலை பதியப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டங்களின் போது எம்.பி.க்கள் மற்றும் தலைவர்கள் உட்பட மொத்தம் 91 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் (TMC) தலைவர் மஹூவா மொய்த்ரா மற்றும் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வாத்ரா உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது போராட்டத்தின் போது காயமடைந்ததாகவும், சிராய்ப்புகளுக்கு ஆளானதாகவும் தெரிவித்தனர்.
தில்லி காவல்துறையின் ‘முறையீடு’ மற்றும் தடுப்புக் நடவடிக்கைகள்
காக்ரோச் ஜனதா கட்சி (CJP) மற்றும் அகில இந்திய மாணவர் சங்கம் (AISA), மாணவர் பெடரேஷன் (SFI), அகில இந்திய மாணவர் சங்கம் (AISF) உள்ளிட்ட பல இடதுசாரி மாணவர் அமைப்புகள் அக்டோபர் 10 அன்று தில்லி ஜந்தர் மந்தரில் பெருந்திரள் போராட்டம் நடத்தப்படும் என அறைகூவல் விடுத்துள்ளன.
இதுகுறித்து காவல்துறையினரிடம் முறையாகத் தெரிவிக்க, CJP அமைப்பின் தலைமைப் பேச்சாளர் சௌரவ் தாஸ் கடந்த புதன்கிழமையன்று நாடாளுமன்றத் தெரு காவல் நிலையத்திற்குச் சென்றார். அப்போது, போராட்டம் நடத்துவதற்கு எதற்காகக் ‘காவல்துறையின் அனுமதி’ பெற வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார். இருப்பினும், இந்தப் போராட்டத்திற்குத் தில்லி காவல்துறை அதிகாரப்பூர்வமாக அனுமதி மறுத்துள்ளது.
இதற்கிடையே, எவ்விதத் தெளிவான காரணமும்மின்றி தில்லியின் பல முக்கியச் சாலைகளில் மஞ்சள் தடுப்புகளை அமைத்து நகரின் மையப்பகுதியை ஒரு கோட்டையைப் போல மாற்றிவரும் காவல்துறை, அக்டோபர் 10 போராட்டத்தைக் கைவிடுமாறு பொதுமக்களுக்கு “கோரிக்கை” வைக்கும் பிரச்சாரத்தையும் கையில் எடுத்துள்ளது.
‘தி இந்து’ நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலின்படி, “அக்டோபர் 7 முதல் 10 வரை நடைபெற உள்ள இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என வலியுறுத்தி, மாணவர் விடுதி உரிமையாளர்கள், வணிக சங்கங்கள் மற்றும் குடியிருப்பு நலச் சங்கங்களுடன் (RWA) அதிகாரப்பூர்வக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன” எனத் தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற CJP போராட்டங்களில் பங்கேற்ற, ‘குற்றப் பின்னணி’ இருப்பதாகக் கூறப்படும் சுமார் 2,800 பேரைத் தில்லி காவல்துறை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது.
ஜூலை மாதப் போராட்டத்தின் போது, காவல்துறையினர் முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை (Facial Recognition Technology) பயன்படுத்தி இளைஞர்கள், செய்தியாளர்கள் மற்றும் பாதசாரிகளின் முகங்களை ரகசியமாகக் குறிப்பெடுத்ததன் மூலமே இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தொடர்பான பொதுநல வழக்கு ஒன்று தற்போது தில்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 10 போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக தில்லிக்கு வரவிருந்த மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக CJP பேச்சாளர் அசுதோஷ் ரங்கா வியாழக்கிழமை காலை தெரிவித்தார். இருப்பினும், இத்தகைய அடக்குமுறைத் தந்திரங்கள் எடுபடாது என்றும், மற்றவர்களும் தொடர்ந்து போராட்டத்தில் இணைவார்கள் என்றும் அவர் கூறினார்.
ஞானேஷ் குமாரின் பாதுகாப்பு தீவிரம்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜிநாகாவை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட விரும்பும் மாணவர் தலைவர்கள் மற்றும் பொதுமக்களை ஒடுக்குவதில் பாதுகாப்புப் படையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ள அதேவேளையில், மறுபுறம் ஞானேஷ் குமாருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பும் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அவருக்கு Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவரது இல்லத்திற்கு வெளியே கூடுதல் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக ‘தி இந்தியன் எக்சுபிரைஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
“புது தில்லி மாவட்டத்தில் ஏற்கனவே போராட்டங்கள் நடைபெற்று வருவதால், எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க அனைத்துப் பாதுகாப்பு முகமைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று உள்ளூர் மாவட்டக் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தில்லிக்கு குவியும் கூடுதல் துணை ராணுவப் படைகள்
இந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் உள்ள உணர்வுபூர்வமான எல்லைப் பகுதிகளில் இருந்து சுமார் 12,000 மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்கள் விமான மூலம் தில்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக ‘தி டெலிகிராப்’ செய்தி வெளியிட்டுள்ளது. அமைதியான முறையில் போராட்டங்கள் திட்டமிடப்பட்டு வரும் தலைநகரத்திற்கு எல்லைப் பாதுகாப்புப் படைகளை நகர்த்துவது குறித்து பலத்த கவலைகள் எழுந்துள்ளன.
“அக்டோபர் 10-ம் தேதி தில்லியில் நடைபெற உள்ள போராட்டங்களை எதிர்கொள்ளும் வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த மேற்கு வங்கம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் சத்தீஸ்கரில் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த சுமார் 12,000 வீரர்கள் விமானம் மூலம் வரவழைக்கப்படுகிறார்கள்” என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
