சென்னை பெசன்ட் நகரில் டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக அமைதியான முறையில் குரல் எழுப்பிய சமூகச் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டதற்கு எஸ்டிபிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அபுபக்கர் சித்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசியலமைப்புக்கு விரோதமான எஸ்ஐஆர் குளறுபடிகளைக் கண்டித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாகப் பதவி விலகக் கோரியும், தலைநகர் டெல்லியில் காக்ரோச் ஜனதா பார்ட்டி உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக சக்திகள், மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள் ஒருங்கிணைந்து இன்று (அக். 10) போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
ஆனால், இந்தப் போராட்டத்தைத் தடுக்கும் நோக்கில் மெட்ரோ மற்றும் ரயில் சேவைகளை ரத்து செய்தும், இணையச் சேவையைத் துண்டித்தும், 20 ஆயிரத்துக்கும் அதிகமான காவல் மற்றும் துணை ராணுவ வீரர்களைக் குவித்தும், தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்தும், போராட்டத்திற்கு வந்த இளைஞர்களை ரயில்களில் இருந்து கீழிறக்கியும் ஒன்றிய பாஜக அரசு பலப்பிரயோகம் செய்து ஜனநாயகத்தை ஒடுக்கி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், ஒன்றிய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்தும், டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாகவும், தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவி விலகலை வலியுறுத்தியும் சென்னை பெசன்ட் நகரில் அமைதியான முறையில் குரல் எழுப்பிய சமூகச் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இளைஞர்களைத் தமிழக காவல்துறை கைது செய்திருப்பது ஜனநாயக அத்துமீறல் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, கைது செய்யப்பட்ட அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், தங்களது ஜனநாயகக் குரலை எழுப்புவதற்கு ஓர் இடத்தை ஒதுக்கி அனுமதி வழங்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையைச் சென்னை காவல்துறை பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி ‘இந்தியா கூட்டணி’ சார்பில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாகச் சென்னையில் நடைபெற்ற கூட்டணிக் கூட்டத்தில், ஆளும் தவெக அரசின் பிரதிநிதிகளாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், அதே கோரிக்கைக்காக அறவழியில் குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்களுக்குத் தமிழக காவல்துறை அனுமதி மறுப்பதும், அவர்களைக் கைது செய்வதும் முரண்பாடாக இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
ஜனநாயக ரீதியிலும் அறவழியிலும் மக்கள் தங்களது உரிமைகளுக்காகக் குரல் எழுப்புவதைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு எஸ்டிபிஐ கட்சி எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும், மக்கள் உரிமைகளைப் பாதுகாக்கவும் ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும் நடைபெறும் அனைத்து அறவழிப் போராட்டங்களுக்கும் முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் இடதுசாரி வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நன்றி!
