செங்கல்பட்டு அருகே பழவேலி பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கடையின் வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடையை உடனடியாக மூட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
திம்மராஜகுளத்தில் மூடப்பட்ட கடை பழவேலிக்கு மாற்றம்

செங்கல்பட்டு மாவட்டம், திம்மராஜகுளம் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை எண் 4015, அப்பகுதி மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது பழவேலி பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அச்சம்
பழவேலி பகுதி மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கும், பள்ளி மாணவ, மாணவியர் கல்வி நிலையங்களுக்குச் செல்வதற்கும் புதிய டாஸ்மாக் கடை அமைந்துள்ள பகுதியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இத்தகைய பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வழித்தடத்தில் மதுபானக் கடை அமைக்கப்பட்டிருப்பது தங்களுக்கும் குழந்தைகளுக்கும் சிரமங்களை ஏற்படுத்தும் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடையை மூடக் கோரி பெண்கள் போராட்டம்
இதையடுத்து, புதிதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையின் வாசலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடையை உடனடியாக மூட வேண்டும் என்றும், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழவேலி பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. போராட்டத்தைத் தொடர்ந்து அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
