
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களுடன் இணைந்து பேருந்து முன்பதிவுக்கு ‘Roamie’ என்னும் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முன்னணி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள ‘Roamie’ (www.roamie.co.in) என்ற புதிய பேருந்து டிக்கெட் முன்பதிவு இணையதளம் மற்றும் செயலி இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (DPIIT) முன்னெடுப்பான ONDC (Open Network for Digital Commerce) திறந்த டிஜிட்டல் வர்த்தக வலையமைப்புடன் இணைந்து இத்தளம் செயல்படுகிறது.
‘Roamie’ செயலியின் நோக்கங்கள் & சிறப்பம்சங்கள்:
குறைந்த கமிஷன் – நியாயமான கட்டணம்: தனியார் முன்பதிவுத் தளங்களின் அதிக கமிஷன் செலவைக் குறைத்து, பேருந்து உரிமையாளர்களின் வருவாயை அதிகரிப்பதோடு, அந்தப் பயனைப் பயணிகளுக்கும் வழங்கும் வகையில் கட்டணங்கள் குறைக்கப்படும்.
1,000+ பேருந்துகள் இணைப்பு: முதற்கட்டமாக 100-க்கும் மேற்பட்ட பேருந்து உரிமையாளர்கள், 1,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
ஒப்பீட்டு வசதி: பயணிகள் புறப்படும் நேரம், கட்டணம், பேருந்து வகை மற்றும் இருக்கைகளை ஒப்பிட்டுப் பார்த்துத் தங்களுக்கு ஏற்ற பேருந்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
நேரலை கண்காணிப்பு (Live Tracking): பேருந்துகளின் இருப்பிடத்தை அறிந்துகொள்ளும் வசதியும், வெளிப்படையான கட்டண விவரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
சிறு நிறுவனங்களுக்கும் வாய்ப்பு: பிராந்திய மற்றும் சிறிய பேருந்து உரிமையாளர்கள் தங்களது சேவைகளை அதிகளவிலான பயணிகளிடம் எளிதாகக் கொண்டு சேர்க்க ONDC இணைப்பு வழிவகுக்கிறது.

முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு:
‘Roamie’ செயலி விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதன்படி, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் – AOBOA தலைவர் அ.அன்பழகன், AOBOA துணைத் தலைவர் சுனில் குமார், COBOTA (கோயம்புத்தூர்) தலைவர் திருமூர்த்தி மற்றும் செயலாளர் செந்தில் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தலைவர் அ.அன்பழகன், “அதிக கமிஷன் செலவைக் குறைத்து, வெளிப்படையான முறையில் பயணிகளுக்கு நியாயமான கட்டணத்தில் தரமான சேவையை வழங்குவதே Roamie-யின் முதன்மை நோக்கம்” என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆம்னி பேருந்துகளின் முக்கியத் தரவுகள்
- தமிழ்நாட்டில் தினமும் 6,000-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கம்; 2.50 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயன்பாடு.
சென்னையிலிருந்து மட்டும் தினமும் 1,800 பேருந்துகள் இயக்கப்பட்டு 70,000 பயணிகள் பயணம் செய்கின்றனர்.
இத்துறை மூலம் தமிழக அரசிற்கு ஆண்டுதோறும் ₹900 கோடி நேரடி வருவாயும், ₹3,000 கோடி மறைமுக வருவாயும் கிடைக்கிறது.
மேலும், பயணிகள் Roamie செயலியை Google Play Store மற்றும் Apple App Store வழியாகப் பதிவிறக்கம் செய்து முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
