
25 கண்காணிப்பு கோபுரங்கள், டிரோன்கள், FRS ஆப் மற்றும் கைக் குழந்தைகளுக்கு ‘Wrist Band’ என சென்னை காவல்துறை பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
வரும் நவம்பர் 08, 2026 அன்று தீபாவளி பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்கவும், சொந்த ஊர்களுக்குப் பயணிக்கவும் சென்னை நகரின் முக்கிய வணிக மையங்களில் பெருமளவில் கூடி வருகின்றனர்.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A.அமல்ராஜ், இ.கா.ப., அவர்களின் நேரிடை உத்தரவின் பேரில் சென்னை பெருநகர் முழுவதும் விரிவான சிறப்பு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
18,000 காவல் ஆளிநர்களுடன் 3-அடுக்கு பாதுகாப்பு:
சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய மண்டலங்களான தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், என்.எஸ்.சி.போஸ் ரோடு, MC ரோடு – GA ரோடு, கோயம்பேடு மற்றும் அண்ணாநகர் ஆகிய பகுதிகளில்:
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல்
குற்றச் சம்பவங்களைத் தடுத்தல்
போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துதல்
ஆகிய 3 முதன்மை அம்சங்களின் அடிப்படையில் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் உட்பட சுமார் 18,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உயர் தொழில்நுட்பக் கண்காணிப்பு & தற்காலிக கட்டுப்பாட்டறைகள்:
கண்காணிப்பு கோபுரங்கள் & பைனாகுலர்: தி.நகர் (10), அடையார் (1), பூக்கடை (4), வண்ணாரப்பேட்டை (2), கீழ்பாக்கம் (4), திருவல்லிக்கேணி (2) மற்றும் கோயம்பேடு (2) ஆகிய பகுதிகளில் மொத்தம் 25 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் (Watch Towers) அமைக்கப்பட்டு, 37 பைனாகுலர் காவல் குழுக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சிசிடிவி & ட்ரோன் கேமராக்கள்: தி.நகர், பூக்கடை, திருவல்லிக்கேணி, கோயம்பேடு பகுதிகளில் 7 டிரோன் கேமராக்கள் (Drone Cameras) மூலம் வான்வழிக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், 205 தற்காலிக சிசிடிவி கேமராக்கள், 10 மினி சிசிடிவி கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் சீருடையில் 100 பாடி-வேர்ன் (Body-Worn) கேமராக்கள் மூலம் நேரடி (Live) கண்காணிப்பு நடைபெறுகிறது.
12 கட்டுப்பாட்டறைகள் & உதவி மையங்கள்: மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 12 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகளும் 37 தற்காலிக காவல் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
குற்றவாளிகளைக் கண்டறிய FRS ஆப்: பழைய குற்றவாளிகளை அடையாளம் காண Face Recognition System (FRS) எனும் செயலி மூலம் 199 சிறப்பு காவல் குழுவினர் சந்தேகத்திற்குரிய நபர்களைச் சோதனையிட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் பாதுகாப்பு & விழிப்புணர்வு முறைகள்:
பெண்களுக்கு கழுத்து துணி கவசம் (Scarf): நகைப்பறிப்பைத் தவிர்க்கும் பொருட்டு பொருட்கள் வாங்க வரும் பெண்களின் கழுத்தில் கட்டிக்கொள்ள துணி கவசங்கள் (Scarf) வழங்கப்படுகின்றன.
குழந்தைகளுக்கு ரிஸ்ட் பேண்ட் (Wrist Band): கூட்ட நெரிசலில் சிறுவர்-சிறுமையர் காணாமல் போவதைத் தடுக்க அவர்களின் கைகளில் பெற்றோர் தொடர்பு எண்ணுடன் கூடிய ‘Wrist Band’ கட்டப்படுகிறது.
மொபைல் எக்ஸ்-ரே ஸ்கேனர்: வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் Mobile X-ray Baggage Scanner வாகனம் மூலம் உடைமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
சாதாரண உடையில் ரோந்து: கூட்டத்தில் குற்றவாளிகளைக் கண்காணிக்க ஆண், பெண் காவலர்கள் சிவிலியன் உடையில் இரகசியக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஒலிபெருக்கி & LED திரைகள்: 66 ஒலிபெருக்கிகள் மற்றும் 4 அகன்ற LED திரைகள் மூலம் திருட்டு தடுப்பு வழிகாட்டல்கள், தானியங்கி ஆடியோ விழிப்புணர்வு வாசகங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்ற நேரக் கட்டுப்பாடு அறிவிப்பு:
பட்டாசு கடைகளின் அருகே தீயணைப்புத் துறை மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் செய்யப்பட்டுள்ளன.
மாண்புமிகு உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, தீபாவளியன்று:
காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை
இரவு 07.00 மணி முதல் 08.00 மணி வரை
என குறிப்பிட்ட 2 மணி நேரங்கள் மட்டுமே பொதுமக்கள் பாதுகாப்பாகப் பட்டாசுகளை வெடித்து தீபாவளியைக் கொண்டாடுமாறு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தீபாவளி பண்டிகை: 15,659 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – அமைச்சர் விஜய் தமிழ் பார்த்திபன்.!

