
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி மாயமாகி இன்றோடு 24 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையிலும், சிறுமி குறித்து எவ்வித உறுதியான தகவலும் கிடைக்காதது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

24 நாட்கள் மர்மம்: வழக்கின் பின்னணி
கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி திடீரென காணாமல் போனார். முதலில் இவழக்கை விசாரணை செய்த விழுப்புரம் மாவட்டக் காவல் துறை, 10 நாட்கள் தீவிரத் தேடுதலில் ஈடுபட்ட நிலையிலும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து, வழக்கில் முன்னேற்றம் இல்லாததால் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு (CBCID) மாற்றப்பட்டது.
14-வது நாளாகச் சிபிசிஐடி விசாரணை தீவிரமடைவு:
அக்டோபர் 22 முதல் இன்று வரை 14 நாட்களாகச் சிபிசிஐடி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்: சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய 35-க்கும் மேற்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சிறுமியின் வீட்டிற்கு அருகே வசிப்பவர்களிடம் சிபிசிஐடி போலீசார் மீண்டும் மறுவிசாரணை நடத்தி வருகின்றனர்.

சரித்திர பதிவேடு குற்றவாளியின் நண்பரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை!
இவ்வழக்கில் முக்கிய திருப்பமாக, சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜதுரை என்பவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த, ஆடு மேய்க்கும் இளைஞரான அரவிந்த் என்பவரிடம் சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீசார் இரண்டாவது நாளாகக் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, சிபிசிஐடி போலீசாரின் விசாரணை கோணம் தற்போது ஆலம்பூண்டி வனப்பகுதியை நோக்கித் திரும்பியுள்ளது.
உயர் அதிகாரிகள் வீடியோ கான்ஃபரன்ஸ் ஆலோசனை:
நேற்றைய தினம் இவ்வழக்கு விசாரணையில் ஈடுபட்டுள்ள சிபிசிஐடி டிஎஸ்பிகள் கீதா மற்றும் வேல்முருகன் தலைமையிலான அதிகாரிகளுடன் சிபிசிஐடி உயர் அதிகாரிகள் காணொளி காட்சி (Video Conference) மூலமாக அவசர ஆலோசனை நடத்தினர்.
அப்போது வழக்கில் இதுவரை சேகரிக்கப்பட்ட தடயங்கள், சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் நிலவரம் மற்றும் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
