அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் திமுக – தவெக இடையேதான் போட்டி என முதல்வர் கூறியதையே எடுத்துக்காட்டி பதில் – மற்றவர்கள் கனவு உலகத்தில் வாழட்டும் என விமர்சனம் – நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் குறித்த கேள்வியைத் தவிர்த்த அமைச்சர்!
தமிழகத்தின் கடன் சுமையைக் குறைப்பதற்கும், மாநிலத்தின் நிதிநிலையை மேம்படுத்துவதற்கும் முதல்வர் மற்றும் கட்சித் தலைவரின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வருவதாக தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார்.
அங்கிருந்து தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா ஆலயத்திற்குச் சென்ற அவர், அங்கு பிரார்த்தனை மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு அரசியல் மற்றும் நிதி சார்ந்த கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
தமிழகத்தின் கடன் சுமையைக் குறைக்க நடவடிக்கை – அமைச்சர் மரிய வில்சன்!
தமிழகத்தின் நிதிச்சுமை எவ்வளவு உள்ளது? கடனை அடைப்பதற்கான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளதா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஜிஎஸ்டி வருவாய் உள்ளிட்ட நிதி ஆதாரங்கள் மற்றும் கடன் வரம்புகளுக்கு உட்பட்டே அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தின் கடன் சுமையைக் குறைக்க வேண்டும் என்று முதல்வர் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளார். அதன்படி, தலைவரின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசின் நிதிநிலையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
மத்திய அரசிடம் தமிழக வளர்ச்சிக்குத் தேவையான நிதி கேட்டு பெறுவோம்!
கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு உரிய நிதியை வழங்கவில்லை என்று திமுக குற்றம்சாட்டி வந்த நிலையில், தற்போது மத்திய அரசுடனான நிதி உறவு எவ்வாறு உள்ளது? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்கள் மற்றும் நிதி தொடர்பாக பிரதமரிடம் கேட்டுப் பெறுவோம் என்று முதல்வர் தெளிவாகக் கூறியுள்ளார்.
எந்தத் திட்டமாக இருந்தாலும், அதற்குத் தேவையான நிதியாக இருந்தாலும் முறைப்படி கேட்டு பெறப்படும். தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றைப் பெறுவதில் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.
தேர்தலுக்காகத்தான் முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாரா? – கேள்விக்கு பதிலடி!
முதல்வர் விஜய் தேர்தலை முன்னிட்டு ஊர் ஊராகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், முதல்வர் எந்த மாநிலத்திற்குச் செல்ல வேண்டும், எந்த மாவட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்பதற்கு மற்றவர்களிடம் அனுமதி பெற வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், முதல்வர் எந்தப் பகுதிக்கும் செல்லலாம். ஆனால் சிலர் அனைத்தையும் தேர்தல் கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர். தலைவர் அவ்வாறு பார்ப்பதில்லை.
கடந்த முறை சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்குக்கூட அவர்கள் வழிவகை செய்யவில்லை. இடைத்தேர்தலுக்காகத்தான் நீங்கள் வருவீர்கள் என்று கூறுவது முறையல்ல எனத் தெரிவித்தார்.
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் திமுக – தவெக இடையேதான் போட்டியா?
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டி யாருக்கு இடையே இருக்கும்? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மரிய வில்சன், முதல்வர் ஏற்கெனவே கூறிய கருத்தை எடுத்துக்காட்டிப் பேசினார்.
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலைப் பொறுத்தவரையில் திமுக மற்றும் தவெக இடையேதான் போட்டி இருக்கும். இடையில் இருப்பவர்கள் போட்டி என்று கூறிக்கொண்டிருக்கலாம். முதல்வர் கூறியதைப் போல இருவருக்கு இடையில்தான் போட்டி. இன்றைக்கும் அதே நிலைப்பாடு, என்றைக்கும் அதே நிலைப்பாடுதான்.
மற்றவர்கள் தங்களது கனவு உலகத்தில் வாழட்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு – அமைச்சர் கேள்வி!
தமிழகத்தில் அரசின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்துப் பேசிய அமைச்சர், தற்போது எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
CMT ஒப்புதல் உள்ளிட்ட நடைமுறைகளில் தேவையற்ற தலையீடுகள் இல்லை என்றும், ஆன்லைன் விண்ணப்ப நடைமுறைகள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், அனைவருக்கும் அனைத்தும் என்ற அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது. 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு கொண்டு வந்திருப்பது தெரியவில்லையா? அரசின் பணிகளைப் பாராட்டாமல் குறை கூறுவது மட்டுமே சிலரது வேலையாக உள்ளது என விமர்சித்தார்.
நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் குறித்து கேள்வி – பதிலளிக்காமல் சென்ற அமைச்சர்!
இதற்கிடையே நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளிக்க விரும்பாத அமைச்சர் மரிய வில்சன், “அதை விட்டுவிடுங்கள்” என்று கூறி அந்தக் கேள்வியைக் கடந்து சென்றார்.
தூத்துக்குடி விமான நிலைய வருகையின்போது தமிழக அரசின் நிதிநிலை, மத்திய அரசுடனான நிதி உறவு, முதல்வரின் சுற்றுப்பயணம், அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமைச்சர் அளித்த பேட்டி அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
