மேற்கு வங்காள மாநிலத்தில் மனைவியைக் கொலை செய்து, அவரது தலையைத் துண்டித்து காளி கோவிலுக்கு எடுத்துச் சென்று மடியில் வைத்தபடி கணவர் அமர்ந்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேற்கு வங்காளத்தின் தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் கங்காராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரிந்து கோஷ் (46). இவரது மனைவி சீமா சர்க்கார் (42). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
ரிந்து கோஷ், வடக்கு வங்காள மாநில போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துநராகப் பணியாற்றி வந்தார். சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர் வேலையை இழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து குடும்பத்தில் பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டதுடன், கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மனைவியைக் கொலை செய்த கணவர்
இந்நிலையில், கடந்த புதன்கிழமை அதிகாலை வீட்டில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ரிந்து கோஷ், கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் மனைவியின் தலையை எடுத்துக்கொண்டு, வீட்டின் வளாகத்தில் அமைந்திருந்த காளி கோவிலுக்குச் சென்றுள்ளார். அங்கு மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையை மடியில் வைத்தபடி அமர்ந்திருந்தார். அப்போது அவர்களது இரண்டு மகன்களும் அருகில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர்
கோவிலில் இத்தகைய கோலத்தில் அவர் அமர்ந்திருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கங்காராம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரிந்து கோஷைக் கைது செய்தனர். வீட்டில் கிடந்த பெண்ணின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலைக்குப் பயன்படுத்தியதாகக் கருதப்படும் கூர்மையான ஆயுதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
வேலை பறிபோனதால் மனநிலை பாதிப்பு?
கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டபோது, வேலை இழந்த பிறகு தனது மனநிலை பாதிக்கப்பட்டதாக ரிந்து கோஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
வேலை இழந்த பிறகு குடும்பத்தை நடத்துவதில் சிரமப்பட்டதாகவும், சிறு சிறு தொழில்களில் ஈடுபட்டும் நிலையான வருமானம் கிடைக்கவில்லை என்றும் அவரது உறவினர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த சில வாரங்களாக அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதாகவும், அசைவ உணவுகளைத் தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வந்ததாகவும் உறவினர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, கணவன் – மனைவி இடையேயான குடும்பத் தகராறே கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
