தேர்தலில் வெற்றி பெற்றால் கொண்டாடுவதும், தோல்வியடைந்தால் வருத்தப்படுவதும் இயல்பு.
ஆனால், ஆந்திர மாநிலத்தில் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவர், வாக்காளர்களுக்கு வழங்கிய பணத்தைத் திருப்பிக் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பாலமனேர் நகராட்சியில் நடைபெற்ற தேர்தலில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் 32-வது வார்டு கவுன்சிலர் வேட்பாளராகப் போட்டியிட்ட பிரசாத் ரெட்டி, ஜனசேனா கட்சியின் வேட்பாளர் பூலா சைதன்யாவிடம் தோல்வியடைந்தார்.
10 சதவீத வட்டிக்குப் பணம் வாங்கி விநியோகம் செய்ததாக ஆதங்கம்!
தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதற்காக 10 சதவீத வட்டிக்குக் கடன் வாங்கியதாக பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது வார்டில் உள்ள வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாகவும், தனக்கு வாக்களிப்பதாக உறுதியளித்தவர்கள் தற்போது ஏமாற்றிவிட்டதாகவும் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
“400 பேர் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்!”
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
“மாரியம்மன் மீது சத்தியம் செய்து என்னிடம் பணம் பெற்றவர்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. சுமார் 400 பேர் என்னிடம் பணம் பெற்றுக்கொண்டு வாக்களிக்காமல் ஏமாற்றிவிட்டனர்.
எனக்கு வாக்களிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் என்னிடம் வாங்கிய பணத்தையாவது திருப்பிக் கொடுங்கள். அந்தப் பணத்தில் நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்.
என்னை ஏமாற்றினால் மாரியம்மன் சும்மா விடமாட்டார்” எனக் கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!
தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக வாக்காளர்களுக்குப் பணம் வழங்கியதாகக் கூறப்படும் வேட்பாளர், தோல்விக்குப் பிறகு அந்தப் பணத்தைத் திருப்பிக் கேட்பது அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்களிடையிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், வாக்குகளுக்காகப் பணம் வழங்குவது மற்றும் தேர்தலில் வாக்காளர்களின் சுதந்திரமான முடிவு குறித்த விவாதங்களும் எழுந்துள்ளன.
