தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வாடகை வீட்டில் ரகசியமாக ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட முயன்ற கும்பலை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் கும்பலிடமிருந்து ரூ.6.78 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் மற்றும் அச்சிடும் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வாகனச் சோதனையில் சிக்கிய கும்பல்!
ஐதராபாத் அப்துல்லாபூர்மெட் பகுதியில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஃபியூச்சர் சிட்டி காவல் ஆணையர் டாக்டர் தருண் ஜோஷி உத்தரவின்பேரில், ஷாத்நகர் சிறப்பு அதிரடிப்படை போலீசாரும் அப்துல்லாபூர்மெட் போலீசாரும் இணைந்து வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஐதராபாத்தில் இருந்து விஜயவாடா நோக்கிச் சென்ற சந்தேகத்திற்கிடமான காரைத் தடுத்து சோதனையிட்டனர். அதில் ரூ.500 மதிப்பிலான கள்ளநோட்டுகள் ரூ.8 லட்சம் அளவுக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காரில் இருந்த 4 பேரையும் கைது செய்து விசாரித்தபோது, கள்ளநோட்டு தயாரிக்கும் பெரிய நெட்வொர்க் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
வாடகை வீட்டில் ரகசியமாகச் செயல்பட்ட அச்சகக் கூடம்!
விசாரணையில், பெத்த அம்பர்பேட்டை அருகே உள்ள குண்ட்லூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு கள்ளநோட்டுகளை அச்சடித்து வந்தது தெரியவந்தது.
இந்தக் கும்பலில் மொத்தம் 7 பேர் ஈடுபட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.6.78 கோடி மதிப்பிலான ரூ.500 கள்ளநோட்டுகள், ஸ்கேனர்கள், பிரிண்டர்கள், அச்சிடும் உபகரணங்கள் மற்றும் போலி வாகனப் பதிவு எண்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாடகைக் கார் ஓட்டுநர்களாகப் பணியாற்றியவர்கள்!
கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் முன்பு ஒரே நிறுவனத்தில் வாடகைக் கார் ஓட்டுநர்களாகப் பணியாற்றியவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறுகிய காலத்தில் அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இணையதளம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் தகவல்களைச் சேகரித்து கள்ளநோட்டு தயாரிப்பில் இறங்கியதாகக் கூறப்படுகிறது.
இதற்காக வெளிமாநிலங்களில் இருந்து விலையுயர்ந்த அச்சுப்பொறிகளை வாங்கி, கள்ளநோட்டுகளைத் தயாரிக்கத் தேவையான பொருட்களையும் சேகரித்துள்ளனர்.
போலி போலீசாக மாறி மிரட்டல் – ரூ.5 லட்சம் கொள்ளை!
கள்ளநோட்டு புழக்கத்தின்போது யாராவது சந்தேகம் தெரிவித்தால் அவர்களை மிரட்டுவதற்காக, போலீசார் போல வேடமணிந்தும் இந்தக் கும்பல் செயல்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
காக்கி உடை, போலி போலீஸ் அடையாள அட்டைகள், போலித் துப்பாக்கிகள் மற்றும் வாக்கி-டாக்கிகளைப் பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டியுள்ளனர்.
மேலும், இதற்கு முன்பு இரண்டு பேரை மிரட்டி அவர்களிடமிருந்து சுமார் ரூ.5 லட்சம் வரை கொள்ளையடித்ததும் கண்டறியப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
4 பேர் கைது – 3 பேரிடம் தொடர்ந்து விசாரணை!
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள மூன்று பேர் வேறு வழக்குகளில் மகேஸ்வரம் போலீசாரின் காவலில் இருப்பதாகவும், அவர்களையும் பிடிவாரண்ட் மூலம் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் ஆணையர் தருண் ஜோஷி தெரிவித்துள்ளார்.
மேலும், மாநிலங்களுக்கு இடையே செயல்பட்டு வந்த கள்ளநோட்டு கும்பலைக் கண்டுபிடித்த சிறப்பு அதிரடிப்படை மற்றும் அப்துல்லாபூர்மெட் காவல்துறையினரை அவர் பாராட்டினார்.
