ரெஜினா நடிக்கும் ‘RX’ பட போஸ்டர்கள் வெளியாகி உள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகை ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ‘RX’ படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் ரெஜினா
அஜித்தின் ‘விடாமுயற்சி’ மற்றும் நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ போன்ற பெரிய நட்சத்திரங்களின் படங்களில் அழுத்தமான மற்றும் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டி வருகிறார். அதே சமயம் தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது அவர் லீட் ரோலில் நடித்துவரும் படம்தான் இந்த ‘RX’.
’சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தின் இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் மற்றும் ஜி ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றன. இப்படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ராவுடன் இணைந்து நாசர், ரமேஷ் திலக் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹரிஹரன் ராஜு கதை எழுத செல்வகீர்த்தி எஸ்.கே ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு பணிகளைக் கவனித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த ‘RX’ படத்தின் புதிய போஸ்டர்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருவதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு உயர்த்தியுள்ளன.
