நடிகர் கமல் 22 ஆண்டுகளுக்கு பிறகு தனக்கு சொந்தமான தலைப்பை மீட்டெடுத்துள்ளார்.
கடந்த 2004-ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மாபெரும் வெற்றித் திரைப்படமான ‘விருமாண்டி’ படத்திற்கு முதன்முதலில் ‘சண்டியர்’ என்றுதான் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. ஆனால், சில அரசியல் காரணங்கள் மற்றும் எதிர்ப்புகள் காரணமாக அந்தத் தலைப்பை அப்போது பயன்படுத்த முடியாமல் போக, படம் ‘விருமாண்டி’ என்ற பெயரில் வெளியானது. ஆனால் தற்போது சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் அந்த கெத்தான ‘சண்டியர்’ தலைப்பை மீண்டும் தனதாக்கியுள்ளார்.
அதாவது ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு அதிகாரப்பூர்வமாக ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் டைட்டிலும் வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகின்றன. இந்த படமானது நடிகர் கமல்ஹாசனின் 237 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ‘சித்தா’ மற்றும் ‘வீரதீர சூரன்’ போன்ற திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் மிகப்பெரிய நற்பெயரைப் பெற்றவர் இயக்குநர் எஸ்.யு.அருண்குமார். அவர் தற்போது முதன்முறையாக உலகநாயகன் கமல்ஹாசனை இயக்கவுள்ளதால், இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு திரையுலகில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இனிவரும் நாட்களில் படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளிவரும் என நம்பப்படுகிறது.
