சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள், மருத்துவமனை நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்கு வரும் தங்களைப் பல்வேறு இடங்களுக்கு அலையவிடுவதாகவும், உரிய வழிகாட்டுதல் கிடைக்காமல் சிரமப்படுவதாகவும் நோயாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

2, 3 நாட்களாக அலையும் நிலை
இதுகுறித்து நோயாளிகள் கூறுகையில், “இங்க போங்க, அங்க போங்கனு எங்களை அலைய விடுறாங்க. உடம்பு சரியில்லனு மருத்துவமனைக்கு வந்தால், 2, 3 நாட்களுக்கு அலையவிடுறாங்க. ஏற்கெனவே உடல்நலம் பாதிக்கப்பட்டு வரும் எங்களுக்கு இது இன்னும் அதிகமான கஷ்டத்தை ஏற்படுத்துகிறது” என வேதனை தெரிவித்தனர்.
வயதானவர்களுக்கு வழிகாட்டுதல் இல்லை
குறிப்பாக, வயதான நோயாளிகள் மருத்துவமனையில் எந்தப் பிரிவுக்குச் செல்ல வேண்டும், எங்கு சிகிச்சை பெற வேண்டும் என்பது குறித்து முறையான வழிகாட்டுதல் கிடைப்பதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் வயதானவர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று அலைந்து திரிய வேண்டிய நிலை ஏற்படுவதாகக் கூறினர்.
நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்
மேலும், “அரசை நாங்கள் குற்றம் சுமத்த விரும்பவில்லை. இங்குள்ள மருத்துவமனை நிர்வாகம்தான் இதை முறையாகக் கவனிக்க வேண்டும். நோயாளிகளுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் சிரமங்களைக் குறைக்க மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
