Homeசெய்திகள்தமிழ்நாடுபோலி நூல் கொள்முதல் ஊழலின் மொத்த மதிப்பு என்ன? யார் யாருக்குத் தொடர்பு? – வெள்ளை...

போலி நூல் கொள்முதல் ஊழலின் மொத்த மதிப்பு என்ன? யார் யாருக்குத் தொடர்பு? – வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

-

- Advertisement -

கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கான நூல் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்துள்ள புகார்கள் தொடர்பாக, ஊழலின் மொத்த மதிப்பு எவ்வளவு, இதில் யார் யாருக்குத் தொடர்பு உள்ளது என்ற முழு விவரங்களையும் தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.போலி நூல் கொள்முதல் ஊழலின் மொத்த மதிப்பு என்ன? யார் யாருக்குத் தொடர்பு? – வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய பதிப்பாளர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

we-r-hiring

பெரியார் அறிவுலகம் நூல் கொள்முதலில் முறைகேடு புகார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கான நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கடந்த 6-ஆம் தேதி குற்றச்சாட்டுகள் எழுந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

பதிப்பகத் துறையில் பெரிய அளவில் அறியப்படாத அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் ஆகிய பதிப்பகங்களிலிருந்து அதிக எண்ணிக்கையில் நூல்கள் வாங்கப்பட்டதாகவும், அவற்றில் சில நூல்கள் இல்லாத நபர்களின் கற்பனைப் பெயர்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்ற குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தென்காசி நூலகத்திலும் 2,200 போலி நூல்கள் இருந்ததாகப் புகார்

கோவை நூலகத்தில் மட்டுமே முறைகேடு நடைபெற்றதாகக் கருதப்பட்ட நிலையில், தென்காசியில் கடந்த ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி திறக்கப்பட்ட மத்திய நூலகத்திலும் அகல்விளக்கு பதிப்பகத்தின் சுமார் 2,200 போலி நூல்கள் அடையாளம் காணப்பட்டு அகற்றப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

அந்த நூல்களில் பெரும்பாலானவற்றின் விலை ரூ.1,000-க்கும் அதிகமாக இருந்ததாகவும், அவற்றைக் கொள்முதல் செய்ததற்காக அகல்விளக்கு பதிப்பகத்திற்கு மட்டும் ரூ.27 லட்சம் வழங்கப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நூலகங்களுக்கும் அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களிலிருந்து அதிக அளவில் நூல்கள் வாங்கப்பட்டதாகக் கூறப்படுவதாகவும், கன்னிமாரா நூலகம் முதல் கிராமப்புறக் கிளை நூலகங்கள் வரை இந்தப் பதிப்பகங்களின் நூல்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

3 வங்கிக் கணக்குகளில் ரூ.22 லட்சம் முடக்கம்

இந்த விவகாரம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சில உத்தரவுகளைப் பிறப்பித்ததைத் தொடர்ந்து, அகல்விளக்கு பதிப்பகத்திற்குச் சொந்தமான மூன்று வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.22 லட்சம் முடக்கப்பட்டுள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாத நிலையில், விரைவில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாக அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நூலகக் கட்டுமானப் பணிகளிலும் முறைகேடா?

நூல் கொள்முதல் விவகாரத்தில் அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்கள் மட்டுமின்றி மேலும் பல பதிப்பகங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தை அன்புமணி எழுப்பியுள்ளார்.

நூல்களைக் கொள்முதல் செய்ததில் மட்டுமல்லாமல், நூலகங்கள் கட்டப்பட்டதிலும் கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த விவகாரங்கள் அனைத்தும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

முழுமையான விவரங்களுடன் வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்

தமிழக மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட்ட நூல் கொள்முதல் தொடர்பான விவரங்களை அறிந்துகொள்ள மக்களுக்கு முழு உரிமை இருப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் எந்தெந்த நூலகங்களுக்கு அகல்விளக்கு, பீனிக்ஸ் உள்ளிட்ட பதிப்பகங்களிலிருந்து எவ்வளவு நூல்கள் வாங்கப்பட்டன, அவற்றின் மொத்த மதிப்பு என்ன, நூல்களை வாங்கப் பரிந்துரைத்தவர்கள் யார், கொள்முதலுக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் யார் என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய பதிப்பாளர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தி, குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

புத்தகக் கொள்முதல் முறைகேட்டில் தவறு செய்த ஒருவரைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லையா?” – உயர் நீதிமன்றக் கிளை சரமாரிக் கேள்வி!

MUST READ