திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. ஒருவர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில், சட்டப்படி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதற்கு உறுதுணையாக இருப்போம் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.![]()
மரகதம் சந்திரசேகர் பிறந்தநாள் விழா

திருவள்ளூரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மரகதம் சந்திரசேகரின் 109-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் போதைப்பொருட்களின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துக் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
போதைப்பொருள் ஒழிப்பில் மூல காரணங்களைக் கண்டறிய வேண்டும்
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த அதன் மூல காரணங்களைக் கண்டறிந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய சசிகாந்த் செந்தில், போதைப்பொருள் விற்பனையை முழுமையாகக் கட்டுப்படுத்தும் வரை சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்றும் கூறினார்.
குற்றவாளிகள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நடவடிக்கை அவசியம்
தவெகவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அல்லது வேறு எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார். எந்த அரசாங்கமோ அல்லது அரசியல் சக்தியோ குற்றம் சாட்டப்பட்டவர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க வைக்கக் கூடாது என்றும் கூறினார்.
மேலும், மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. ஒருவர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில், சட்டம் தனது விசாரணையை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு காங்கிரஸ் உறுதுணையாக நிற்கும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் காங்கிரஸ் சரிவதற்கு வாய்ப்பில்லை
ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி சரிவைச் சந்தித்ததைப் போலத் தமிழ்நாட்டிலும் ஏற்பட வாய்ப்புள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த சசிகாந்த் செந்தில், காங்கிரஸ் மிகப்பெரிய கட்சி என்றும், தமிழகத்தில் அத்தகைய சரிவு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் கூறினார்.
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் பாவம் – ஜோதிமணி கருத்துக்கு மாணிக்கம் தாகூர் பதில்!
