தமிழகத்தில் அரசு நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்துள்ள புகார் தற்போது பல்வேறு மாவட்டங்களுக்கும் விரிவடைந்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தென்காசி மாவட்ட மத்திய நூலகத்தில் அகல் விளக்கு பதிப்பகம் மூலம் விநியோகிக்கப்பட்ட சுமார் 2,200 சந்தேகத்திற்குரிய நூல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நூல்கள் அனைத்தும் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தென்காசி நூலகத்தில் 2,200 நூல்கள் அகற்றம்
தென்காசி மாவட்ட மத்திய நூலகத்தில் அகல் விளக்கு பதிப்பகம் வெளியிட்ட சுமார் 2,200 நூல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் பல நூல்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும், அவற்றின் உள்ளடக்கம் மற்றும் ஆசிரியர் விவரங்கள் குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட நூல்கள் வாசகர்களின் பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டு தனி அறையில் வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பிற நூலகங்களிலும் இதே பதிப்பகத்தின் நூல்கள் உள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரூ.27 லட்சத்திற்கு கொள்முதல்?
கடந்த 2025-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், தென்காசி மாவட்ட மத்திய நூலகத்திற்கு சுமார் ரூ.27 லட்சம் செலவில் இந்த நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நூல்களின் தரம், ஆசிரியர்களின் உண்மைத்தன்மை மற்றும் கொள்முதல் நடைமுறைகள் குறித்து தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.
மாநிலம் முழுவதும் விரிவடையும் விசாரணை
கோவை பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட அரசு நூலகங்களில் சந்தேகத்திற்குரிய நூல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள நூலகங்களில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே, அகல் விளக்கு பதிப்பகம் உள்ளிட்ட பதிப்பகங்கள் தொடர்பான புத்தகக் கொள்முதல் முறைகேடுகள் குறித்து வழக்குப் பதிவு செய்யவும், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
அரசு நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததா, இதற்குப் பின்னால் யார் யார் உள்ளனர் என்பது குறித்த விசாரணை தீவிரமடைந்துள்ளதால், இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
பெரியார் அறிவுலக நூலகத்தில் சர்ச்சை – அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்கள் அகற்றம்!
