டிக்-டாக் (TikTok) வீடியோ எடுப்பதற்காகக் கூண்டிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்ட புலி தாக்கியதில், 19 வயது பண்ணை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் லாகூர் மாவட்டம், கஹ்னா பகுதியில் உள்ள தனியார் வனவிலங்கு இனப்பெருக்கப் பண்ணையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு பணியாற்றி வந்த தல்ஹா (Talha) என்ற 19 வயது இளைஞரே உயிரிழந்தவர்.
சம்பவத்தன்று, டிக்-டாக் பிரபலமான நௌமான் ஹசன் (Nouman Hassan) என்பவர் அந்தப் பண்ணைக்கு வீடியோ எடுப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது வீடியோ எடுப்பதற்காகக் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த பெண் புலியை வெளியே கொண்டு வருமாறு கேட்டுள்ளார்.
இதையடுத்து கூண்டிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்ட புலி திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த தல்ஹாவைத் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை உடனடியாகத் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
உண்மையை மறைக்க முயற்சி – இருவர் கைது!
இந்தச் சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. முதலில் தல்ஹா நாய்க்கடிக்கு உள்ளானதாகக் கூறி சம்பவத்தை மறைக்க முயன்றதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பின்னர் விசாரணையில் பெண் புலியின் தாக்குதலே உயிரிழப்புக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து பண்ணையின் உரிமையாளர் ஃபயாஸ் மற்றும் வீடியோ எடுக்க வந்த டிக்-டாக் பிரபலம் நௌமான் ஹசன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், அந்தப் பண்ணையில் புலியை வளர்ப்பதற்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா? போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா? என்ற கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தாக்குதலில் ஈடுபட்ட பெண் புலி வனவிலங்குத் துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கிற்காக மனித உயிரைப் பணயம் வைக்கக் கூடாது!
இந்தச் சம்பவம் தொடர்பாக லாகூர் காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிக்-டாக் மீதான ஆர்வம் ஒரு மனித உயிரைவிட முக்கியமானதாக இருக்க முடியாது என்றும், பொழுதுபோக்கிற்காக மனித உயிரைப் பணயம் வைக்க அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காக ஆபத்தான விலங்குகளுடன் வீடியோ எடுக்கும் முயற்சி ஒரு இளைஞரின் உயிரைப் பறித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சமூக வலைதளப் பிரபலங்களின் பொறுப்பற்ற செயல்கள் குறித்த விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
