இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருவதாகவும், பக்குவம் மற்றும் புரிதல் இல்லாத முற்போக்கு சிந்தனையற்ற அரசாக தவெக அரசு செயல்படுவதாகவும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம் குற்றம்சாட்டியுள்ளார்.
![]()
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தங்களது 45 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஊழியர் சந்திப்பு மற்றும் பெருந்திரள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக சேலத்தில் போராட்டத்தைத் தொடங்கி வைத்த மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, தேர்தல் காலத்தில் முதலமைச்சர் அளித்த வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 45 கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
அவுட்சோர்சிங் முறைக்கு எதிர்ப்பு
லட்சக்கணக்கான அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை நிரப்பாமல் அவுட்சோர்சிங் முறையில் தனியார் நிறுவனங்கள் மூலம் பணியாளர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுப்பது இளைஞர்களுக்கும், படித்த மாணவர்களுக்கும் எதிரானது என்று சோமசுந்தரம் குற்றம்சாட்டினார்.
அரசுப் பணிகளைப் படிப்படியாகத் தனியார்மயமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருவதாகவும், இது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் துரோகம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
அரசாணைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தல்
அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் போதிய பக்குவமும் புரிதலும் இல்லாமல் செயல்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை மனு அளிக்கக் கூடாது, வாரத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட உடையை மட்டுமே அணிய வேண்டும் என்பது போன்ற உத்தரவுகளை அரசாணைகளாக வெளியிடுவது ஏற்புடையதல்ல என்றார்.
இதுபோன்ற அரசாணைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்துவதாகத் தெரிவித்தார்.
டிசம்பர் 4-ல் மாபெரும் போராட்டம்
அவுட்சோர்சிங் முறையைத் தொடர்வது இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கும் நடவடிக்கை என்று குறிப்பிட்ட சோமசுந்தரம், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றாவிட்டால், வரும் டிசம்பர் 4-ம் தேதி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என எச்சரித்தார்.
அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் ஆய்வு செய்வது குறித்தும் கண்டனம்
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அறிவுறுத்திய பிறகும், ஆளுங்கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் அல்லாத சிலர் ரீல்ஸ் வெளியிடுவதற்காக ஆய்வு என்ற பெயரில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்குச் செல்வதாகக் குற்றம்சாட்டிய அவர், இதுபோன்ற செயல்களுக்கு முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தொடர்புடைய சட்டமன்ற உறுப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சோமசுந்தரம் வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சிலர் இதனை வதந்தி எனக் கூறுவது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம், 45 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் டிசம்பர் 4-ம் தேதி மாபெரும் போராட்டம் நடைபெறும் என மீண்டும் எச்சரித்தார்.
