பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில் மூன்றாம் நாளன்று 1008 சங்கு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி தீபத்திருவிழா மூன்றாம் நாளான இன்று இரண்டாம் பிரகாரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க 1008 சங்காபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பிரதோஷ நந்தி சிலை அருகே நான்கு திசையிலும் புனித நீருடன் அடங்கிய 1008 சங்குகள் அமைத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க 108 மூலிகை பொருட்கள் கொண்டு சிறப்பு மகா யாகம் நடைபெற்றது.
பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக குண்டத்தில் பூர்னாஹூதியும் வெகு விமர்சையாக நடந்தேறியது.
அதனைத் தொடர்ந்து யாக சாலையில் வைக்கப்பட்டிருந்த புனித கலச நீர் திருக்கோவிலில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு 1008 சங்காபிஷேகம் செய்யப்பட்டது.
இந்த சங்காபிஷேக நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
