திருவள்ளூர் அடுத்த கூடப்பாக்கத்தில் அமரர் ஊர்தியைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தைக் கொள்ளையடித்த வழக்கில், முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ராஜூ (47) என்பவரைத் தனிப்படை போலீசார் கிருஷ்ணகிரியில் கைது செய்துள்ளனர்.

பங்களாதேஷுக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்பட்ட அவரை, இரண்டு மாதங்களாகக் கண்காணித்து வந்த போலீசார், மீண்டும் தமிழகம் வந்தபோது கைது செய்துள்ளனர்.
ரூ.12.54 லட்சத்துடன் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை:
கூடப்பாக்கம் மேட்டுக்கண்டிகை பகுதியில் உள்ள ஹிதாச்சி நிறுவன ஏடிஎம் மையத்தில் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி நள்ளிரவு கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது.
அமரர் ஊர்தியில் வந்த மர்ம கும்பல், ஏடிஎம் இயந்திரத்தைப் பெயர்த்து எடுத்துச் சென்றது. அந்த இயந்திரத்தில் ரூ.12.54 லட்சம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆவடி மாநகர காவல் துணை ஆணையர் சாந்தாராம் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
ஏற்கெனவே 3 பேர் கைது:
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பதுங்கியிருந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மௌசன் சர்பான்கான் (28), சமின் (30), ரசூல் (26) ஆகிய மூவரையும் கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பங்களாதேஷுக்குத் தப்பிய ராஜூ:
இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் மிஜானூர் ரஹ்மான் முல்லா என்ற ராஜூவைப் பிடிக்க போலீசார் மேற்கு வங்காளம் சென்றனர். ஆனால், போலீசார் வருவதை அறிந்த அவர் பங்களாதேஷுக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவரது நடமாட்டத்தைக் கண்காணித்து வந்த தனிப்படை போலீசாருக்கு, அவர் மேற்கு வங்காளத்திலிருந்து பெங்களூரு வழியாகத் தமிழகம் வருவதாகத் தகவல் கிடைத்தது.
கிருஷ்ணகிரியில் சுற்றிவளைத்த போலீசார்:
இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரியில் முகாமிட்ட தனிப்படை போலீசார், பெங்களூருவிலிருந்து ஆம்னி பேருந்தில் வந்த ராஜூவை வழிமறித்துக் கைது செய்தனர்.
வெள்ளவேடு காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், கூடப்பாக்கம் ஏடிஎம் கொள்ளைச் சம்பவத்தில் அவருக்கு முக்கியப் பங்கு இருப்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், டெல்லி மற்றும் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்களிலும் அவருக்குத் தொடர்பு இருப்பதாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராஜூவிடமிருந்து ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தின் உதிரிபாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் மூன்று பேரைப் பிடிக்க போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
