தமிழக அரசின் வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் மற்றும் பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம் ஆகியவற்றில் பயன்பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பைத் தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

அரசின் நலத்திட்ட உதவிகள் தகுதியான பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
ஆதார் எண் கட்டாயம்:
மேற்கண்ட இரண்டு திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் பெண்கள் தங்களது ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும். இதன்மூலம் பயனாளிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆதார் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
இதுவரை ஆதார் எண் பெறாத பெண்கள், இத்திட்டங்களின் கீழ் பதிவு செய்வதற்கு முன்பாக ஆதார் அட்டையைப் பெறுவதற்கு முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும்.
மாற்று ஆவணங்கள் சமர்ப்பிக்கலாம்:
ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்த பிறகும், தொழில்நுட்ப அல்லது நிர்வாகக் காரணங்களால் ஆதார் எண் ஒதுக்கப்படாமல் இருந்தால், அவர்கள் திட்டத்தில் பயன்பெற மாற்று ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஆதார் விண்ணப்பித்ததற்கான ஒப்புகைச் சீட்டுடன், அரசு அங்கீகரித்த மாற்று அடையாள ஆவணங்களைச் சமர்ப்பித்து திட்டத்தில் பயன்பெறலாம் என அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆதார் பெறுவதில் தாமதம் ஏற்படும் பெண்களும், உரிய மாற்று ஆவணங்களைச் சமர்ப்பித்து அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
