தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள செல்ஃபி பாயிண்ட் பெயர்ப் பலகைகளை, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அரசாணைகளின்படி தமிழில் மாற்றி அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி தீரன் திருமுருகன், இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள ‘நம்ம Madurai’ செல்ஃபி பாயிண்ட் பெயர்ப் பலகையில் ‘நம்ம’ என்ற சொல் தமிழிலும், ‘Madurai’ என்ற சொல் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதேபோன்று சென்னை, தஞ்சாவூர், திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட நகரங்களிலும், கொடைக்கானல், ஊட்டி, குற்றாலம் போன்ற சுற்றுலாத் தலங்களிலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து பெயர்ப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு அதிகாரப்பூர்வ மொழிச் சட்டம் மற்றும் அதுதொடர்பான அரசாணைகளின்படி, பெயர்ப் பலகைகளில் தமிழுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் 5:3:2 என்ற விகிதத்தில் இடம்பெற வேண்டும் என்றும் மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனவே, தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள செல்ஃபி பாயிண்ட் பெயர்ப் பலகைகளை அகற்றி, திருத்தி அல்லது மாற்றி, தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அரசாணைகளின்படி செல்ஃபி பாயிண்ட் பெயர்ப் பலகைகளைத் தமிழில் மாற்றி அமைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், பெயர்ப் பலகைகள் அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், அதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
