திருவண்ணாமலையில் வருகின்ற 24ஆம் தேதி நடைபெற உள்ள திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள பணிகள் அனைத்தும் வருகின்ற 21ஆம் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் தெரிவித்துள்ளார்.
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் அமைச்சர் சீ.ரமேஷ் தலைமையில், மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் முன்னிலையில் நடைபெற்றது. இதில், அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். தீப தரிசனத்தைக் காண வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சீ.ரமேஷ் கூறியதாவது:
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து பல்வேறு கட்டங்களாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது வரை 80 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள 20 சதவீதப் பணிகளும் வருகின்ற 21ஆம் தேதிக்குள் முடிக்கப்படும்.
கடந்த ஆண்டு பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்திற்காக ரூ.500, ரூ.600 எனக் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முதல் முறையாக உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் முற்றிலும் இலவசமாக இணையதளம் வாயிலாகப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்திற்காக மொத்தம் 3,000 நுழைவுச்சீட்டுகள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அண்ணாமலையார் திருக்கோவில் இணையதளம் தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஒரே நேரத்தில் ஏராளமானோர் முன்பதிவு செய்ய முயன்றதால் சர்வர் முடங்கியது. உடனடியாகப் பிரச்சினை சரிசெய்யப்பட்டு, தற்போது பக்தர்கள் தொடர்ந்து முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு தீப தரிசனத்திற்காக 7,500 முதல் 8,000 பக்தர்கள் வரை திருக்கோவிலுக்குள் அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 35 முதல் 40 சதவீத நுழைவுச்சீட்டுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள நுழைவுச்சீட்டுகள் உபயதாரர்கள், நீதிபதிகள், அரசு அலுவலர்கள், முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு வழங்கப்பட உள்ளன. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் நுழைவுச்சீட்டுகளைக் கேட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
உள்ளூர் பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி திருக்கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த ஆண்டு ஆன்லைன் நுழைவுச்சீட்டு முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களுக்கு உரிய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே பொதுமக்களுக்கான நுழைவுச்சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அண்ணாமலையார் திருக்கோவிலுக்குள் சென்று மகா தீப தரிசனம் காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவிலின் பல்வேறு இடங்களில் பக்தர்கள் அமர்ந்திருந்தாலும், அங்கிருந்து தீபமலையைத் தரிசிக்க முடியாத பகுதிகள் இந்த முறை கண்டறியப்பட்டுள்ளன.
அத்தகைய இடங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தீபமலையைத் தெளிவாகத் தரிசிக்கக்கூடிய இடங்களில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
திருவண்ணாமலைக்கு வருகை தரும் வெளியூர் பக்தர்கள், உள்ளூர் பக்தர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் என அனைவரின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டே மலை ஏறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகளும் முழுமையாக நிறைவடைந்த பின்னர் அறங்காவலர்கள் அந்தந்தத் திருக்கோவில்களுக்கு நியமிக்கப்படுவார்கள்.
மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டோர் திருக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்வதற்காகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், கிரிவலப் பாதையில் ஒவ்வொரு 500 மீட்டர் தொலைவிற்கும் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மருத்துவ முகாம்கள், காவல் நிலையங்கள், ‘May I Help You’ உதவி மையங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு அனைவரது ஆதரவுடனும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவைச் சிறப்பாக நடத்திடப் பொதுமக்களும் பக்தர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் சீ.ரமேஷ் கேட்டுக்கொண்டார்.
