
பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் காட்டு யானைக்கு மிக அருகில் சென்ற விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, அண்மையில் நீலகிரி மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். மசினகுடி, பொக்காபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். பழங்குடி மாணவர்களுடன் உட்கார்ந்து உணவு அருந்திய அவர், அதேவேளையில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் வனத்துறையினருடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
சர்ச்சையின் பின்னணி என்ன?
வைரலான வீடியோ & சர்ச்சை: அமைச்சர் வன்னி அரசு அண்மையில் முதுமலை மற்றும் கர்நாடக எல்லையிலுள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகங்களுக்குச் சென்றிருந்தார். அப்போது அவர் வனப்பகுதிக்குள் சிறுத்தை மற்றும் புலியை நோக்கி ஓடுவது போன்றும், காட்டு யானைக்கு மிக அருகில் சென்று தொந்தரவு செய்வது போன்றும் வெளியான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

வன உயிரின ஆர்வலர்கள் கண்டனம்: சாமானிய மக்கள் வனப்பகுதியில் இவ்வாறு நடந்துகொண்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் வனத்துறையினர், அமைச்சர் என்பதால் வேடிக்கை பார்த்ததாக வன உயிரின ஆர்வலர்களும் எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தனர். வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்தது.
கர்நாடக அரசின் அதிரடி நடவடிக்கை:
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் வாகனத்தில் சவாரி சென்ற அமைச்சர் வன்னி அரசு, விதிகளை மீறி காட்டு யானைக்கு மிக அருகில் சென்றது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தக் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி, “இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரிக்கப்படும். அவரவர் பதவி எதுவாக இருந்தாலும், வனப் பகுதிகளில் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/edappadi-palaniswami-criticizes-tamil-nadu-government/249998


