Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுக கருவேப்பிலை மரம் அல்ல; நிழல் தரும் ஆலமரம் – ஜூனியர் விகடன் இதழைக் கிழித்து...

அதிமுக கருவேப்பிலை மரம் அல்ல; நிழல் தரும் ஆலமரம் – ஜூனியர் விகடன் இதழைக் கிழித்து ஆர்.பி.உதயகுமார் கண்டனம்!

-

- Advertisement -

ஜூனியர் விகடன் வார இதழில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதன் வெளிப்பாடாக, அந்த இதழைக் கிழித்தும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.அதிமுக கருவேப்பிலை மரம் அல்ல; நிழல் தரும் ஆலமரம் – ஜூனியர் விகடன் இதழைக் கிழித்து ஆர்.பி.உதயகுமார் கண்டனம்!

ஜூனியர் விகடன் வார இதழின் இன்றைய பதிப்பில், ‘ஒரு தொண்டனின் மனக்குமுறல்’, ‘ரத்தத்தின் ரத்தம் ரத்தக்கண்ணீர்’ என்ற தலைப்புகளில் வெளியான கட்டுரையில், அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி குறித்து அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

“ஒரு தொண்டனின் மனக்குமுறல் என எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் மொட்டை கடிதாசி போன்ற ஒரு செய்தியை ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ளது. இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோடிக்கணக்கான தொண்டர்கள் மற்றும் கழக அம்மா பேரவை சார்பில் கடும் கண்டனத்திற்குரியது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கிய இந்த இயக்கம், புரட்சித்தலைவி அம்மா காலத்தில் இந்தியாவிலேயே மூன்றாவது மாபெரும் இயக்கமாக வளர்ந்தது. அவருக்குப் பிறகு தலைமை இல்லாத சூழலில், தொண்டர்களுக்கு வழிகாட்டியாக இருந்து ஜனநாயக ரீதியில் கட்சியை வழிநடத்தி வருபவர் எடப்பாடி பழனிசாமி.

ஒரு விவசாயியாகப் பிறந்து, கிளைக்கழகச் செயலாளராகத் தொடங்கி படிப்படியாக பொதுச்செயலாளர் நிலைக்கு உயர்ந்தவர். 50 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர். நான்கரை ஆண்டுகள் முதலமைச்சராகப் பணியாற்றியபோது 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு, 6 புதிய மாவட்டங்கள், ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், குடிமராமத்துத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியவர்.

ஆட்சி பறிபோனாலும் பரவாயில்லை என்று சமூகநீதியைக் காப்பாற்றியவர். தமிழகத்தின் சாலை மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர். அவரது உழைப்பையும் மக்கள் சேவையையும் மறைத்துவிட்டு, கற்பனையான குற்றச்சாட்டுகளை வெளியிடுவது வேதனையளிக்கிறது.

ஒரு இயக்கத்தில் வெற்றி, தோல்வி மட்டுமே முக்கியமல்ல. தொண்டர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் தலைவர்கள் மக்களுக்காக எவ்வாறு உழைக்கிறார்கள் என்பதுதான் அவர்களின் செல்வாக்கை நிலைநிறுத்தும்.

எடப்பாடியார் கட்சிக்காகவும், ஆட்சிக்காகவும் தன்னை அர்ப்பணித்து உழைத்து வருகிறார். அவரை விமர்சிப்பவர்கள் களத்தில் இறங்கி கட்சியை வழிநடத்துவதில் உள்ள சவால்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அதிமுக கருவேப்பிலை மரம் அல்ல; பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவதற்கு. இது நிழல் தரும் ஆலமரம். இங்கு வருபவர்களுக்கு நிழலும், ஆதரவும் தரும் இயக்கம்.

மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அம்மாவின் ஆட்சி மலர வேண்டும் என்பதற்காக அவர் உழைத்து வருகிறார். அவர் மீது அவதூறுகளைப் பரப்பி கோடிக்கணக்கான தொண்டர்களின் மனதைப் புண்படுத்துவதை கழக அம்மா பேரவை கடுமையாகக் கண்டிக்கிறது.

இதேபோன்ற செயல்கள் தொடர்ந்தால் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அவரது அனுமதியுடன் தமிழகம் முழுவதும் கண்டனப் போராட்டங்கள் நடத்தப்படும்” என்றார்.

தொடர்ந்து, ஜூனியர் விகடன் வார இதழைக் கிழித்து தனது கண்டனத்தை வெளிப்படுத்தினார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் இந்தச் செயல் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஆட்சிக்கு முன்பும் ரீல்ஸ்; ஆட்சிக்கு வந்த பிறகும் ரீல்ஸ்! தவெக அரசை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி!

MUST READ