பஞ்சாப் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துவிட்டதாகவும், மாற்றத்திற்கு மக்கள் முழுமையாக தயாராகிவிட்டதாகவும் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், பஞ்சாப் பொறுப்பாளருமான சச்சின் பைலட் குற்றம் சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமர்சித்தார்.
அவர் கூறும்போது,”பஞ்சாபில் கேங்ஸ்டர்கள் வெளிப்படையாக துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள். என்கவுன்டர்கள் நடக்கின்றன. சிறைக்குள் இருந்து கொண்டே கப்பம் கேட்டு மிரட்டுகிறார்கள். சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது.
போனில் ஆர்டர் செய்தால் கொடிய போதைப்பொருட்கள் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படுகின்றன. இந்த நிலையை கையாள்வதில் பகவந்த் மான் அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது.
பர்னாலா, படாலா, மொகா என தினமும் எங்காவது துப்பாக்கிச் சூடு, கப்பம் கேட்டு மிரட்டல் நடக்கிறது. பலர் பயத்தினால் காவல்துறையிடம் கூட தகவல் தெரிவிப்பதில்லை. இது வருங்கால தலைமுறைக்கே கவலை அளிக்கும் நிலை” என்றார்.
மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்:
“போதைப்பொருளால் மக்கள் வெறுத்துப் போயுள்ளனர். போதை மற்றும் கப்பப் பணத்தை வைத்து ஆயுதங்கள் வாங்கப்படுகின்றன. ஆம் ஆத்மி அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.
நான்கரை ஆண்டுகளுக்கு முன் ஆட்சிக்கு வந்தவர்கள், டெல்லியில் இருந்து தங்கள் தலைவர்களை பாதுகாப்பதிலும், மக்கள் வரிப்பணத்தில் தங்கள் பிம்பத்தை சுத்தப்படுத்துவதிலும் மட்டுமே கவனம் செலுத்தினர். செய்தித்தாள் விளம்பரங்களில் புகைப்படம் போடுவதுதான் அவர்களின் ஒரே கவனம்” என்றும் சாடினார்.
காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்:
வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். “பஞ்சாப் மக்கள் மாற்றத்திற்கு முழுமையாக தயாராகிவிட்டனர். காங்கிரஸ்தான் பஞ்சாபில் நிலையான அரசை தர முடியும்” என்றார்.
மேலும், எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தலைத் தடுக்காததற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசையும் அவர் கேள்வி எழுப்பினார்.
