நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேர் மீதும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள டெல்லி ரோஸ் அவென்யூ விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2026-ம் ஆண்டு மே 3-ம் தேதி நடைபெற்ற நீட் (NEET-UG) தேர்வில் வினாத்தாள் கசிந்ததாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, மே 12-ம் தேதி தேசிய தேர்வு முகமை (NTA) அந்தத் தேர்வை ரத்து செய்தது. இதையடுத்து, ஜூன் 21-ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை மத்திய புலனாய்வுத் துறை (CBI) மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி அஜய் குப்தா, குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும் வரும் நவம்பர் 21-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் முறைப்படி பதிவு செய்யப்பட உள்ளன.
சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், தேசிய தேர்வு முகமையின் ரகசியப் பிரிவில் பணியாற்றிய பாட வல்லுநர்கள் உள்ளிட்டோர் தேர்வு வினாக்களை சட்டவிரோதமாகப் பெற்று, இடைத்தரகர்கள் மற்றும் பயிற்சி மையங்கள் மூலமாகப் பணத்திற்காகத் தேர்வர்களிடம் விநியோகித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சுமார் 20 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. முதலில் 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பின்னர் மேலும் ஒருவருக்கு எதிராகக் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.
குற்றச்சதி, மோசடி, நம்பிக்கை மோசடி, ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுடன், ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்கும் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பதிப்புரிமைச் சட்டத்தின் கீழும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நவம்பர் 25-ம் தேதி முதல் தினசரி அடிப்படையில் விசாரணை நடைபெற உள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டிய நிலையில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
