Homeசெய்திகள்இந்தியாதிருவனந்தபுரத்தில் 2 கிலோ தங்கம் கொள்ளை வழக்கு: முன்னாள் ஊழியர் உட்பட 6 பேர் கைது...

திருவனந்தபுரத்தில் 2 கிலோ தங்கம் கொள்ளை வழக்கு: முன்னாள் ஊழியர் உட்பட 6 பேர் கைது – காவல்துறையிடம் ஆறுதல் கூறி நாடகமாடிய அதிர்ச்சி பின்னணி!

-

- Advertisement -

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நகை வியாபாரியிடமிருந்து சுமார் 2 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், அவரது முன்னாள் ஊழியர் மற்றும் எதிர்க்கடை உரிமையாளர் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் திட்டமிட்டு சதி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கொள்ளை போன தங்கத்தில் இதுவரை சுமார் அரை கிலோ மீட்கப்பட்டுள்ளது.

பின்னணி என்ன?

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நந்தகுமார் (50), கேரள மாநிலம் திருவனந்தபுரம் சந்தைப் பகுதியில் பழைய தங்க நகைகளை வாங்கி, அவற்றை உருக்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் புதிதாக மற்றொரு கடையையும் தொடங்கியுள்ளார்.

இவரது வியாபாரம் வளர்ந்து வந்த நிலையில், அவரது முன்னாள் ஊழியரான அமுல் அசோக் மற்றும் எதிரே நகைக்கடை நடத்தி வந்த ஜெயராம் ஆகியோருக்கு நந்தகுமார் மீது பொறாமை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, நந்தகுமாரின் தொழிலைப் பாதிக்கும் நோக்கில் இருவரும் திலீப் என்பவருடன் இணைந்து சதித் திட்டம் தீட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக அணில் (37) என்பவரை கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுத்தத் திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.

சினிமா பாணியில் நடந்த கொள்ளை

கடந்த 12-ஆம் தேதி இரவு கடையைப் பூட்டிவிட்டு, சுமார் 2 கிலோ தங்கத்துடன் இருசக்கர வாகனத்தில் நந்தகுமார் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது வழிமறித்த மர்ம நபர்கள், அவரிடம் இருந்த தங்கப் பையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து நந்தகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது அவரது முன்னாள் ஊழியரான அமுல் அசோக்கும் உடன் சென்று ஆறுதல் கூறியதுடன், புகார் அளிக்கவும் துணையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவரே கொள்ளைச் சதியில் தொடர்புடையவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி, செல்போன் அழைப்புகள் மூலம் சிக்கிய கும்பல்

இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து மாநகர காவல் ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சம்பவ இடம் மற்றும் சுற்றுப்புறங்களில் பதிவான சிசிடிவி காட்சிகள், செல்போன் அழைப்பு விவரங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

இதில் நந்தகுமாரின் முன்னாள் ஊழியர் அமுல் அசோக் மற்றும் எதிர்க்கடை உரிமையாளர் ஜெயராம் ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.

6 பேர் கைது – அரை கிலோ தங்கம் மீட்பு

இதனைத் தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அணில், அனூப் மற்றும் சதித் திட்டத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஜெயராம், அமுல் அசோக் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இதுவரை சுமார் அரை கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தங்கத்தை மீட்பதற்கும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து விசாரிப்பதற்கும் போலீசார் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

நகை வியாபாரியின் முன்னாள் ஊழியரே கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் இந்த வழக்கு திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிபிஐ அதிகாரிகள் எனக் கூறி ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கடத்தல் – ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்; 6 பேர் கைது!

MUST READ