திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அன்னபிரசாத அறக்கட்டளைக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடைகள் மூலம் அதன் நிதி சுமார் ரூ.3,100 கோடியாக உயர்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தேவஸ்தானத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட 65 கோயில்களிலும் விரைவில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சிறப்பு நிர்வாகக் குழுத் தலைவரும் செயல் அதிகாரியுமான ரவிச்சந்திரா மற்றும் கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சௌதரி ஆகியோர் இணைந்து, திருமலையில் உள்ள மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா அன்னபிரசாத வளாகத்தில் பக்தர்களுடன் உணவருந்தி, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அன்னபிரசாத மையத்தில் வேத மந்திரங்கள் முழங்க, பத்மாவதி மற்றும் வெங்கடேஸ்வரர் படங்களுக்கும், அன்னபிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் பாத்திரங்களுக்கும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. மேலும், அன்னதானப் பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சௌதரி, திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு சுவாமி தரிசனத்துடன் அன்னபிரசாத சேவையும் புனித யாத்திரையின் முக்கிய அங்கமாக விளங்குவதாகத் தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அன்னபிரசாத அறக்கட்டளைக்கு பக்தர்கள் சுமார் ரூ.1,100 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளதாக அவர் கூறினார். திருமலையில் சாதாரண நாட்களில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கும், பிரம்மோற்சவ காலங்களில் ஒரு நாளைக்கு சுமார் 4.60 லட்சம் பக்தர்களுக்கும் அன்னபிரசாதம் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக, தரிகொண்ட வெங்கமாம்பா அன்னபிரசாத மையம் மூலம் தினமும் 90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்களுக்கு உணவு விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த 1985ஆம் ஆண்டு 2,000 பக்தர்களுடன் தொடங்கப்பட்ட அன்னதானத் திட்டம், தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக, அன்னபிரசாத அறக்கட்டளையின் நிதி தற்போது சுமார் ரூ.3,100 கோடியாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்த அவர், விரைவில் நாடு முழுவதும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட 65 கோயில்களிலும் அன்னபிரசாதம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சி.வி.எஸ்.ஓ. முரளி கிருஷ்ணா, அன்னபிரசாத துணைச் செயல் அதிகாரி ராஜேந்திரா, கோயில் துணைச் செயல் அதிகாரி பாஸ்கர், கேட்டரிங் சிறப்பு அதிகாரி ஸ்ரீ சாஸ்திரி உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
