Homeசெய்திகள்இந்தியா“இந்திய பொருளாதாரத்தின் வேகம் குறையவில்லை” – டோக்கியோவில் ராஜ்நாத் சிங் பெருமிதம்!

“இந்திய பொருளாதாரத்தின் வேகம் குறையவில்லை” – டோக்கியோவில் ராஜ்நாத் சிங் பெருமிதம்!

-

- Advertisement -

மேற்காசியாவில் நிலவும் நெருக்கடி மற்றும் ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு மத்தியிலும், இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் குறையவில்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடிய அவர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

அப்போது பேசிய ராஜ்நாத் சிங், “இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகத் தொடர்ந்து திகழ்கிறது. மேற்காசிய நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சர்வதேச சவால்கள் நீடித்து வருகின்றன. இத்தகைய சூழலிலும் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக உள்ளது. இது சாதாரணமான சாதனை அல்ல.

ஹார்முஸ் நீரிணை வழியாகத் தேவையான அளவு எண்ணெய் இந்தியாவுக்கு வருவதில் சிக்கல்கள் உள்ளன. இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் இந்தியப் பொருளாதாரத்தின் வேகம் குறையாமல் இருப்பதை அரசு உறுதி செய்துள்ளது” என்று தெரிவித்தார்.

7.8 சதவீத வளர்ச்சி:

இந்தியாவின் 7.8 சதவீத வளர்ச்சி என்பது 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்–ஜூன்) பதிவான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதமாகும். இதனைச் சுட்டிக்காட்டிய ராஜ்நாத் சிங், உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்தியப் பொருளாதாரம் வலுவான வளர்ச்சியைத் தொடர்ந்து பதிவு செய்து வருவதாகக் கூறினார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கடந்த 12 ஆண்டுகால சாதனைகளையும் அவர் எடுத்துரைத்தார். இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக நீடிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஜப்பானில் சுமார் 60 ஆயிரம் இந்தியர்கள் வசித்து வருவதாக அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் நக்மா மாலிக் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ராஜ்நாத் சிங் நவம்பர் 18 முதல் 19 வரை ஜப்பானில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்க இந்தியா – ஜப்பான் கூட்டாண்மை அவசியம்: ஜெய்சங்கர் வலியுறுத்தல்!

MUST READ