இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களால் 78 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ரூ.14 லட்சம் கோடிக்கும் அதிகமான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச காலநிலை ஆய்வறிக்கை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

ஜெர்மன்வாட்ச் என்ற சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள ‘காலநிலை இடர் குறியீடு 2026’ (Climate Risk Index 2026) அறிக்கையில், 1995 முதல் 2024 வரையிலான 30 ஆண்டுகளின் காலநிலைப் பேரிடர் பாதிப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
430-க்கும் மேற்பட்ட பேரிடர்கள்:
இந்தியாவில் கடந்த மூன்று தசாப்தங்களில் சுமார் 430 தீவிர வானிலைப் பேரிடர்கள் நிகழ்ந்துள்ளன. இதில் வெள்ளம், புயல், வறட்சி, கடுமையான வெப்ப அலைகள் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளன.
இந்தப் பேரிடர்களால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 130 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பொருளாதார இழப்பு 170 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளதாக அறிக்கை மதிப்பிட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் ரூ.14 லட்சம் கோடிக்கும் அதிகமாகும்.
உலக அளவில் இந்தியாவுக்கு 9-வது இடம்:
காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 9-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முந்தைய குறியீட்டில் இந்தியா 8-வது இடத்தில் இருந்தது.
உலக அளவில் கடந்த 30 ஆண்டுகளில் 9,700-க்கும் மேற்பட்ட தீவிர வானிலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இவற்றால் 8.32 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகப் பொருளாதாரத்துக்கு சுமார் 4.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
வெள்ளம், புயல், வெப்ப அலைகளின் தாக்கம்:
இந்தியாவில் பருவமழைக் காலங்களில் ஏற்படும் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளன. விவசாய நிலங்கள் சேதமடைந்ததுடன், குடியிருப்புகளும் உள்கட்டமைப்புகளும் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
1998-ஆம் ஆண்டு குஜராத் புயல், 1999-ஆம் ஆண்டு ஒடிசா புயல், 2013-ஆம் ஆண்டு உத்தரகண்ட் வெள்ளம், 2014-ஆம் ஆண்டு ஹுத்ஹுத் புயல், 2020-ஆம் ஆண்டு அம்பன் புயல் உள்ளிட்டவை அதிக உயிரிழப்புகளையும் பொருளாதாரச் சேதங்களையும் ஏற்படுத்திய முக்கிய நிகழ்வுகளாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும், 1998, 2002, 2003 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான வெப்ப அலைகளும் பல உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தைக் கையாள வேண்டிய அவசியம்:
தொடர்ச்சியாக ஏற்படும் இயற்கைப் பேரிடர்களால் இந்தியா போன்ற நாடுகள் மீட்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குக் கூட போதிய கால அவகாசம் கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றன.
எனவே, பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், காலநிலை மாற்றத்துக்கு ஏற்ற உள்கட்டமைப்பு, விவசாயப் பாதுகாப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதி ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை இந்த ஆய்வறிக்கை மீண்டும் வலியுறுத்துகிறது.
