மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது தாயார் சோனியா காந்தியின் வாழ்க்கைப் பயணம் மற்றும் பெற்றோரான முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி – சோனியா காந்தி இடையேயான ஆழமான அன்பு, குடும்ப நினைவுகள் குறித்து உணர்ச்சிகரமாகப் பேசியுள்ளார்.

டெல்லியில் சோனியா காந்தியின் சுயசரிதை நூலான ‘Belonging: A Journey of Love’ வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, தனது பெற்றோரின் காதல், அவர்கள் ஒன்றாக வாழ்ந்த தருணங்கள், ராஜிவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு தனது தாயாரின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அப்போது அருகில் அமர்ந்திருந்த சோனியா காந்தியும் மகனின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
பெற்றோரிடையே பார்த்த ஒரே சண்டை!
தனது பெற்றோரின் அன்பான உறவை நினைவுகூர்ந்த ராகுல் காந்தி, தனது வாழ்நாளில் ராஜிவ் காந்திக்கும் சோனியா காந்திக்கும் இடையே ஒரே ஒரு முறை மட்டுமே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டதைப் பார்த்ததாகத் தெரிவித்தார்.
ஒருமுறை தனது தந்தை ராஜிவ் காந்தி, கேப்டன் அமரீந்தர் சிங்குடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சோனியா காந்தி அவரிடம் ஏதோ கூற முயன்றுள்ளார். ஆனால், தொலைபேசி உரையாடலில் கவனம் செலுத்தியிருந்த ராஜிவ் காந்தி, சோனியா கூறுவதைச் சரியாகக் கவனிக்கவில்லை. அவர் மீண்டும் மீண்டும் கூறியபோதும் பதில் கிடைக்காததால் ஏற்பட்ட சிறிய பதற்றமே தான் பார்த்த ஒரே சண்டை என்று ராகுல் காந்தி நகைச்சுவையுடன் நினைவுகூர்ந்தார்.
மேலும், தனது பெற்றோரின் நெருக்கத்தை விளக்கும் வகையில், ஒவ்வொரு முறை குடும்பத்தினர் உணவு சாப்பிடும்போதும் தந்தை ராஜிவ் காந்தியின் மடியில் தாய் சோனியா காந்தி அமர்ந்திருப்பார் என்று கூறினார். இதுதான் இயல்பான குடும்ப வாழ்க்கை என்று தான் சிறுவயதில் நினைத்ததாகவும், நண்பர்களின் வீட்டுக்குச் சென்றபோது அவர்களது பெற்றோர் அப்படி அமர்ந்திருக்காததைப் பார்த்து ஆச்சரியப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ராஜிவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு மாறிய சோனியா காந்தி
தனது பாட்டி இந்திரா காந்தி மற்றும் தந்தை ராஜிவ் காந்தி ஆகிய இருவரையும் அடுத்தடுத்து இழந்த குடும்பத்தின் துயரமான காலத்தைப் பற்றியும் ராகுல் காந்தி பேசினார்.
இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு குடும்பத்தின் முக்கியமான ஆதாரத்தை இழந்ததாகவும், பின்னர் ராஜிவ் காந்தியின் படுகொலை குடும்பத்தை முற்றிலும் நிலைகுலையச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
ராஜிவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு தனது தாயார் சோனியா காந்தியின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டதாக ராகுல் தெரிவித்தார். முன்பு எப்போதும் மகிழ்ச்சியாகவும், கலகலப்பாகவும், அனைவரிடமும் இயல்பாகப் பேசிப் பழகுபவராகவும் இருந்த தனது தாயார், கணவரின் மறைவுக்குப் பிறகு தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு அமைதியான வாழ்க்கைக்குள் சென்றுவிட்டதாகக் கூறினார்.
மேலும், ராஜிவ் காந்தி மறைந்தபோது என்ன நடந்தது என்பது குறித்த நினைவுகள் சோனியா காந்திக்கு முழுமையாக இல்லை என்றும், அவரது சுயசரிதையில் இடம்பெற்றுள்ள அந்தக் காலகட்டத்தின் விவரங்கள் தனது சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் நினைவுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டதாகவும் ராகுல் தெரிவித்தார்.
இந்திய மக்களின் அன்பு திறந்த புதிய கதவு!
கணவரை இழந்த பிறகு சோனியா காந்தியின் வாழ்க்கையில் ஏற்பட்ட வெற்றிடத்தையும், அதன்பின்னர் அவர் மேற்கொண்ட புதிய பயணத்தையும் ராகுல் காந்தி உருக்கமாக விவரித்தார்.
ராஜிவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு தனது தாயாரின் மகிழ்ச்சியான முகம் மறைந்துவிட்டதாகக் கூறிய அவர், இந்திய மக்களின் அன்பும் ஆதரவும் சோனியா காந்திக்கு வாழ்க்கையில் ஒரு புதிய பாதையைத் திறந்ததாகத் தெரிவித்தார்.
குறிப்பாக, கிராமங்களில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் சோனியா காந்தியிடம் அன்பு காட்டி, அவரைத் தங்களுடையவராக ஏற்றுக்கொண்டதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். அந்த மக்களின் அன்பு அவருக்கு புதியதொரு உறவையும், சொந்த உணர்வையும் அளித்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
நான்கு முறை புற்றுநோயை எதிர்கொண்ட சோனியா காந்தி!
தனது தாயாரின் மனவலிமை மற்றும் தைரியம் குறித்துப் பேசிய ராகுல் காந்தி, சோனியா காந்தி தனது வாழ்க்கையில் நான்கு முறை புற்றுநோயை எதிர்கொண்டு மீண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அவர் தனது உடல்நலப் பிரச்சினைகளின் தீவிரத்தைப் பெரிதாக வெளிப்படுத்துவதில்லை என்றும், தனது வாழ்நாளில் ஒருமுறைகூட தாயார் பயப்படுவதையோ, சவால்களைக் கண்டு பின்வாங்குவதையோ தான் பார்த்ததில்லை என்றும் பெருமிதத்துடன் கூறினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் தனது தாயாரைப் பார்த்து, “அம்மா, அப்பா உன்னை மிகவும் நேசித்தார். இன்று உன்னை நினைத்து அவர் எவ்வளவு பெருமைப்படுவார் என்பதை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாது” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பகிர்ந்துகொண்ட இந்தக் குடும்ப நினைவுகளும், தனது தாயாரைப் பற்றிய நெகிழ்ச்சியான வார்த்தைகளும் தற்போது கவனம் ஈர்த்துள்ளன.
“இந்தியாவில் 2014-ம் ஆண்டே ஜனநாயகம் அழிக்கப்பட்டு விட்டது” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு
