வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘அக்வான்’ (Akvan) புயல் தீவிரமடைந்து ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்தின் 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான அக்வான் புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயல் நவம்பர் 20-ம் தேதி நண்பகலுக்குள் ஆந்திராவின் நர்சாபூர் முதல் ஒடிசாவின் பூரி வரையிலான கடலோரப் பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
6 மாவட்டங்களில் 3 நாட்கள் விடுமுறை!
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கஞ்சம், கஜபதி, பூரி, ஜகத்சிங்பூர், கேந்திரபாரா மற்றும் கந்தமால் ஆகிய 6 மாவட்டங்களில் நவம்பர் 19 முதல் 21-ம் தேதி வரை அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாவட்டங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களும் மூடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒடிசா அரசின் சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கோர்தா மாவட்டத்தில் நவம்பர் 19 மற்றும் 20-ம் தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் உள்ளூர் வானிலை நிலவரங்களுக்கு ஏற்ப பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களை மூடுவது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புயல் கரையைக் கடக்கும்போது 110 கி.மீ. வேகத்தில் காற்று!
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, அக்வான் புயல் ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை நவம்பர் 20-ம் தேதி நண்பகலில் கரையைக் கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்திலும், அதிகபட்சமாக 110 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
ஒடிசாவின் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சில இடங்களில் அதீத கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேர்வுகளும் ஒத்திவைப்பு!
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவில் நவம்பர் 21 மற்றும் 23-ம் தேதிகளில் நடைபெறவிருந்த மாநிலத் தேர்வு வாரியத்தின் இளநிலை உதவியாளர் மற்றும் இளநிலை எழுத்தர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்புத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுகளுக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடக்கும் காலகட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு ஒடிசா அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆந்திரா – ஒடிசா கரையை நெருங்கும் ‘அக்வான்’ புயல்! : 3 ரயில்களின் புறப்பாடு மாற்றம்
