நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாள் விழா இன்று விநாயகர் தேரோட்டத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, பக்தி முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 15-ம் தேதி அண்ணாமலையார் சன்னதி முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது.
விழாவின் ஏழாம் நாளான இன்று, அண்ணாமலையார் கோவில் வளாகத்தின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னர் சுவாமிகள் கோயில் வளாகத்தை வலம் வந்து, 16 கால் மண்டபம் அருகே அவரவர்களுக்கான திருத்தேர்களில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.
முதல் தேரான விநாயகர் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து கோவில் இணை ஆணையர் பரணிதரன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் இரா. ஸ்ரீதரன் மற்றும் நகரின் முக்கியப் பிரமுகர்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அப்போது, “அண்ணாமலைக்கு அரோகரா! உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா!” என பக்தர்கள் எழுப்பிய பக்தி முழக்கங்களுடன் விநாயகர் தேர் மாட வீதிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
விநாயகர் தேர் நிலையை அடைந்ததும், அதனைத் தொடர்ந்து முருகர் தேரோட்டம் நடைபெற உள்ளது.
4,500 போலீஸார் பாதுகாப்பு:
தேர் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுமார் 4,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
