அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், வரும் ஆங்கிலப் புத்தாண்டுக்குப் பிறகு ஈரான் மீது மீண்டும் கடுமையான ராணுவத் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இழுத்தடிப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் தாக்குதல்?
அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தால் புத்தாண்டுக்குப் பிறகு ஈரான் மீது மீண்டும் ராணுவத் தாக்குதல் நடத்துவதற்கு தாம் விருப்பம் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், உடனடியாகத் தாக்குதல் நடத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும், அடுத்தகட்ட நடவடிக்கை சூழ்நிலையைப் பொறுத்தே அமையும் என்றும் அவரது முந்தைய கருத்துகள் தெரிவிக்கின்றன.
ஈரானின் ஏவுகணைத் திறன்: வெளியாகும் புதிய காட்சிகள்
இதற்கிடையே, ஒரே நேரத்தில் இரண்டு ஏவுகணைகளைச் செலுத்தக்கூடிய புதிய ஏவுதள அமைப்பை ஈரான் ராணுவம் உருவாக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஏவுதளத்தை ஈரானின் ராணுவ உயர் அதிகாரிகள் பார்வையிடும் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன. நிலத்தடி ஏவுகணைத் தளங்கள் மற்றும் புதிய ஏவுகணைத் தொழில்நுட்பங்கள் தொடர்பான காட்சிகளை ஈரான் வெளியிட்டு வருவது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல் சூழலில் கவனத்தைப் பெற்றுள்ளது.
பஹ்ரைனில் அமெரிக்க ராணுவ இலக்குகள் மீது தாக்குதல்
இந்தப் பதற்றத்தின் மற்றொரு பகுதியாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவப் பயன்பாட்டுக்கான தளங்களில் அமைந்துள்ள பேட்ரியாட் (Patriot) வான் பாதுகாப்பு ரேடார்களைக் குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
அல்-ரிஃபா மற்றும் அவாலி பகுதிகளில் உள்ள ராணுவத் தளங்களை இலக்காகக் கொண்டதாக ஈரான் கூறியுள்ளது. இதனிடையே, பஹ்ரைன் தலைநகர் மனாமா அருகே உள்ள சிற்றாதீவு பகுதியில் தொழிற்சாலை வளாகம் ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகி தீப்பிடித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், அமெரிக்க ராணுவத்துக்குச் சொந்தமான உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து இரு தரப்பிலிருந்தும் வெளியாகும் தகவல்களில் வேறுபாடுகள் உள்ளன.
ஈரான் பிரதிநிதிகள் மீது ட்ரம்ப் விமர்சனம்
அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு பேச்சுவார்த்தைக்கு வரும் ஈரான் பிரதிநிதிகள் முன்பைவிட ஆக்ரோஷமாக நடந்துகொள்வதாக ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், பேச்சுவார்த்தைகளில் அவர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பதாகவும், ஆனால் உறுதியான முடிவுகளை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாகவும் விமர்சித்துள்ளார்.
ஈரான் பிரதிநிதிகளை ‘புரொபஷனல் டேப் டான்சர்ஸ்’ (Professional Tap Dancers) என்று குறிப்பிட்ட ட்ரம்ப், அவர்கள் பேச்சுவார்த்தையில் உண்மையான முன்னேற்றத்தை ஏற்படுத்தாமல் போக்குக் காட்டுவதாகக் கிண்டல் செய்துள்ளார்.
தேர்தல் பின்னடைவும் ஈரான் போரின் தாக்கமும்
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்த நிலையில், ஈரானுடனான போர் அமெரிக்க மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய விவகாரமும் அரசியல் விவாதமாகியுள்ளது.
ஈரானுடனான மோதல் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக ட்ரம்ப்பும் ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும், ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பதற்காகத் தாம் எடுத்த ராணுவ நடவடிக்கையில் மாற்றம் செய்திருக்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
போர் தொடருமா? சமாதான ஒப்பந்தம் ஏற்படுமா?
ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்கும் வகையில் நிரந்தர ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த விரும்புவதாகவும் ட்ரம்ப் ஏற்கெனவே கூறியுள்ளார்.
ஆனால், ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் தொடரும் நிலையில், மறுபுறம் புத்தாண்டுக்குப் பிறகு ராணுவத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கையும் வெளியாகியுள்ளது. இதனால், அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடையுமா அல்லது தூதரகப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது.
ஈரான் மீது மீண்டும் ராணுவத் தாக்குதலா? ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையால் பரபரப்பு!
