உலகக் கணிதத் துறையில் 167 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்து வந்த புகழ்பெற்ற ‘ரீமான் கருதுகோள்’ (Riemann Hypothesis) புதிருக்கு, செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் தீர்வு கண்டுள்ளதாக மானுடவியலாளர் ஒருவர் அறிவித்துள்ளார். சுமார் 1.7 கோடி வரிகளைக் கொண்ட கணித ஆதாரத்தை ஏஐ உதவியுடன் உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

1859-ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த கணிதவியலாளர் பெர்ன்ஹார்ட் ரீமான் முன்வைத்த இந்தக் கருதுகோள், பகா எண்கள் (Prime Numbers) எவ்வாறு பரவிக் காணப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதுடன் தொடர்புடையது. பல தலைமுறை கணிதவியலாளர்கள் முயற்சி செய்தும் இதுவரை நிரூபிக்கப்படாமல் இருந்த இந்தக் கணிதப் புதிர், கணித உலகின் மிக முக்கியமான தீர்க்கப்படாத பிரச்சினைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஏஐ உதவியுடன் ஆதாரத்தை உருவாக்கிய கணிதவியலாளர்
அமெரிக்காவைச் சேர்ந்த ஏஐ நிறுவனமான ஆன்த்ரோபிக் நிறுவனத்தில் பணியாற்றும் கணிதவியலாளர் லெவென்ட் அல்போஜ் (Levent Alpöge), அந்நிறுவனத்தின் கிளாட் (Claude) ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்தக் கருதுகோளுக்கான நிரூபணத்தை உருவாக்கியுள்ளதாக நவம்பர் 20-ஆம் தேதி அறிவித்தார்.
பல வாரங்களாகத் தொடர்ந்து நடைபெற்ற இந்தப் பணியில், கணிதவியலாளர் வழிகாட்டுதலுடன் கிளாட் ஏஐ கணிதக் கணக்கீடுகளையும் நிரூபணத்தின் பல்வேறு பகுதிகளையும் உருவாக்க உதவியுள்ளது. இந்த நிரூபணத்தைச் சரிபார்ப்பதற்காக ‘Lean’ எனப்படும் கணித ஆதாரங்களைச் சோதிக்கும் கணினி மொழியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிரூபணம் சுமார் 1.7 கோடி வரிகளைக் கொண்ட கணினிக் குறியீடுகளாக அமைந்துள்ளது. அதாவது, 17 மில்லியன் வரிகள் கொண்ட இந்தப் பிரம்மாண்டமான ஆதாரத்தை மனிதக் கணிதவியலாளர்கள் முழுமையாகப் புரிந்துகொள்வதே தற்போது பெரும் சவாலாக உள்ளது.
கணினி சரிபார்ப்பு: கணித உலகின் கவனம்
இந்த நிரூபணத்தை ஆய்வு செய்த Lean மற்றும் Mathlib அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்கள், நவம்பர் 21-ஆம் தேதி வெளியிட்ட கூட்டறிக்கையில், அல்போஜின் நிரூபணம் சரியானது என்ற நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தனர். கணினி வழியாக அதன் தர்க்கரீதியான படிகள் சரிபார்க்கப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்த நிரூபணம் எவ்வாறு செயல்படுகிறது, அதன் பின்னணியில் உள்ள புதிய கணிதக் கருத்துகள் என்ன என்பதை மனிதக் கணிதவியலாளர்கள் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. இதனை எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய கணித ஆய்வுக் கட்டுரையாக மாற்றுவதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சில கணிதவியலாளர்கள், கணினி நிரூபணத்தைச் சரிபார்ப்பது ஒரு பக்கம் என்றாலும், அதன் பின்னணியில் உள்ள கணிதக் கருத்துகளை மனிதர்கள் புரிந்துகொள்வதும் அவசியம் எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரூ.8 கோடி பரிசு கிடைக்குமா?
ரீமான் கருதுகோள், அமெரிக்காவின் கிளே கணித நிறுவனம் அறிவித்துள்ள ஏழு மில்லினியம் பரிசுப் பிரச்சினைகளில் ஒன்றாகும். இதற்கு ஏற்றுக்கொள்ளப்படும் நிரூபணத்தை வழங்குபவருக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.8 கோடிக்கும் அதிகமாகும்.
ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள நிரூபண அறிவிப்பின் அடிப்படையில் மட்டும் பரிசுத் தொகை வழங்கப்படாது. ஆய்வுக் கட்டுரை உரிய கணித ஆய்வு இதழில் வெளியிடப்பட்டு, குறைந்தது இரண்டு ஆண்டுகள் கணிதத் துறையினரால் ஆய்வு செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
167 ஆண்டுகாலப் புதிருக்கு ஏஐ உதவியுடன் தீர்வு கண்டுள்ளதாக வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு, கணிதத் துறையில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு குறித்த புதிய விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏஐ பயன்பாட்டில் மனிதக் கண்காணிப்பு அவசியம்: ஐ.நா சபையில் இந்தியா வலியுறுத்தல்
