உலகம் முழுவதும் கடந்த 2025-ஆம் ஆண்டில் சுமார் 47 ஆயிரம் பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் அல்லது வாழ்க்கைத் துணையால் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு 129 பெண்களும், ஒரு மணி நேரத்திற்கு 5 பெண்களும் கொல்லப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் நவம்பர் 25-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, ஐ.நா.வின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகம் (UNODC), ஐ.நா. பெண்கள் அமைப்பு (UN Women) ஆகியவை இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.
78 ஆயிரம் பெண்கள் படுகொலை
கடந்த 2025-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 78 ஆயிரம் பெண்கள் மற்றும் சிறுமிகள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 47 ஆயிரம் பேர் தங்களது கணவர், காதலர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டுள்ளனர். இது மொத்தப் பெண் கொலைகளில் சுமார் 60 சதவீதமாகும்.
இந்தப் புள்ளிவிவரங்கள் 122 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையால் கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 45 ஆயிரம் முதல் 51 ஆயிரம் வரை இருந்து வருவதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஆப்பிரிக்காவில் அதிக உயிரிழப்புகள்
பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது நெருங்கிய உறவினர்கள் அல்லது வாழ்க்கைத் துணையால் கொல்லப்படும் சம்பவங்கள் உலகின் அனைத்து பிராந்தியங்களிலும் பதிவாகியுள்ளன. இதில் ஆப்பிரிக்காவில் அதிகபட்சமாக 22,100 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பிராந்திய வாரியான உயிரிழப்புகள்:
- ஆப்பிரிக்கா – 22,100
- ஆசியா – 15,100
- அமெரிக்கா – 7,400
- ஐரோப்பா – 2,100
- ஓசியானியா – 300
பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான கொலை விகிதத்தில் ஆப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஒரு லட்சம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு 2.9 பேர் என்ற விகிதத்தில் அங்கு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அமெரிக்காவில் 1.4, ஓசியானியாவில் 1.1, ஆசியாவில் 0.6, ஐரோப்பாவில் 0.5 என்ற விகிதத்தில் இந்தக் கொலைகள் நிகழ்ந்துள்ளன.
வீடுகளே பெண்களுக்கு ஆபத்தான இடம்
உலக அளவில் ஒட்டுமொத்த கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், பெண்களுக்கு எதிரான கொலைகள் அதே வேகத்தில் குறையவில்லை என ஐ.நா. தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பல நேரங்களில் திடீரென நிகழ்வதில்லை. நீண்டகால குடும்ப வன்முறை, மிரட்டல், துன்புறுத்தல் மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே பல கொலைகள் நடைபெறுகின்றன. இத்தகைய அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுத்திருந்தால் பல உயிரிழப்புகளைத் தடுத்திருக்க முடியும் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்
பெண்கள் வன்முறைக்கு ஆளாகும்போது அச்சமின்றிப் புகார் அளிக்கவும், உரிய பாதுகாப்பைப் பெறவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்யவும் அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. பெண்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை குடும்ப உறவுகள் மட்டுமின்றி, பரந்த குடும்பச் சூழல்களிலும் விரிவுபடுத்த வேண்டியது அவசியம் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை உலகம் முழுவதும் 16 நாட்கள் பிரச்சாரம் நடைபெறுகிறது. இந்த ஆண்டும் பெண்களின் பாதுகாப்பு, நீதி மற்றும் குற்றவாளிகளுக்குப் பொறுப்பேற்பு ஆகியவற்றை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
“சிவந்த பூமி”… சூப்பர் எல் நினோவால் உலகை வாட்டப்போகும் கடும் வெப்பம்! ஐநா வானிலை அமைப்பு எச்சரிக்கை
