திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததற்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருவதாகவும், வேண்டுமென்றே நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபடவில்லை என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 16 பக்க நிலை அறிக்கையில், தீபம் ஏற்றுவதற்காக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தீபம் ஏற்றப்படாததற்கான காரணங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள்:
உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, நவம்பர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் காவல்துறை, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீபம் ஏற்றுவதற்கான வழித்தடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5,797 போலீசார் பாதுகாப்புப் பணி:
சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் 5,797 போலீசார் மற்றும் 20 நிர்வாக நடுவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், நவம்பர் 23-ஆம் தேதி இரவு முதல் நவம்பர் 25-ஆம் தேதி காலை வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட குழுவினர் வரவில்லை:
நவம்பர் 24-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 6.30 மணிக்குள், கோவில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 10 பேர் கொண்ட குழுவினர் தீபம் ஏற்ற வரவில்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்தக் குழுவினரின் பெயர்ப் பட்டியலும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறங்காவலர் குழு தீர்மானம்:
கோயில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்படாத நபர்களுக்குப் பதிலாக மாற்று நபர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆகம விதிகளின்படி, வழக்கமாக உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் தீபம் ஏற்ற அறங்காவலர் குழு தீர்மானித்ததாகவும், இதன் காரணமாகவே தீபத்தூணில் தீபம் ஏற்ற முடியவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிபந்தனையற்ற மன்னிப்பு:
நீதிமன்ற உத்தரவை நல்லெண்ணத்துடன் செயல்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும், நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததற்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருவதாக தனது நிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
