
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கார்த்திகை தீபம் ஏற்ற முடியாததற்கான காரணங்களைத் தெளிவுபடுத்தி, 17 பக்க விரிவான அறிக்கையை மதுரை மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். தீபத்தூணில் விளக்கு ஏற்றுவதற்கான குழுவைத் தேவஸ்தானம் அமைத்துப் பெயர்களைப் பரிந்துரைக்காததே இதற்குக் காரணம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள்: தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, கடந்த 20-ஆம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகளுடனும், 21-ஆம் தேதி இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மற்றும் காவல் ஆணையருடனும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து திருப்பரங்குன்றம் தாசில்தார் உள்ளிட்ட பிற அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட்டு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ஒவ்வொரு பத்தி வாரியாக விளக்கப்பட்டது.
குழு அமைப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்: தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட 10 நபர்களுக்கு மிகாமல் தீபம் ஏற்றும் நிகழ்வை நடத்த முடிவு செய்யப்பட்டதுடன், கோயில் வழக்கப்படி செயல் அலுவலரால் விளக்கு ஏற்றும் முறை தீர்மானிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. சி.ஆர்.பி.எஃப் (CRPF) படையினரின் பாதுகாப்பு தேவையில்லை என்றும், தமிழகக் காவல்துறைப் படைகளை நிலைநிறுத்தும் திட்டம் தயாராக உள்ளது என்றும் காவல் ஆணையர் தெரிவித்தார். மேலும், 24-ஆம் தேதி தீபம் ஏற்றும் பணியைத் தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் கொண்ட குழுவினரால் மட்டுமே பிரத்தியேகமாக மேற்கொள்ள தேவஸ்தான செயற்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டது.
BNSS பிரிவு 163 தடை உத்தரவு: தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு அமைப்புகள் அணிதிரள்வது மற்றும் போராட்டங்கள் நடத்துவது குறித்த நம்பகத்தகுந்த தகவலின் அடிப்படையில், அசம்பாவிதங்களைத் தடுக்க மதுரை மாவட்டத்தில் BNSS பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போராட்டங்கள், கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் திருப்பரங்குன்றம் மலையில் ஏறுவதற்கான இந்தத் தடை உத்தரவு நவம்பர் 25 காலை 10 மணி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
நேரடி ஆய்வு மற்றும் மாலை 6–6:30 மணி நேரம்: 24-ஆம் தேதி காலை முதல் நண்பகல் 12.30 மணி வரை நேரடியாகத் திருப்பரங்குன்றம் சென்று ஏற்பாடுகளை ஆய்வு செய்து, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் காவல் ஆணையருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தீபம் ஏற்றும் நிகழ்வு நேரமான மாலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட போதிலும், அக்குழு வரவில்லை.

குழு பரிந்துரைக்கப்படாதது: தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு உரிய நபர்களுக்கு அதிகாரம் அளித்து, அங்கீகரிக்கப்பட்ட குழுவின் பெயர்களைக் கோயில் தேவஸ்தானம் எந்தக் கட்டத்திலும் மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை செயலாளருக்கும் மின்னஞ்சல் நினைவூட்டல் உள்ளிட்டவை மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் அனுப்பப்பட்டன.
வழக்கமான இடத்தில் தீபம் மற்றும் வருத்தம்: தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான அதிகாரம் கொண்ட குழு பரிந்துரைக்கப்படாததால், அதற்குப் பதிலாக அறங்காவலர் குழு வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றத் தீர்மானித்தது. அதன்படி, ஒவ்வொரு கார்த்திகைத் திருநாள் அன்றும் வழக்கமாகத் தீபம் ஏற்றும் உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் கோயிலின் மரபுகளுக்கு உட்பட்டுத் திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததற்கு மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிப்பதாகவும், தேவஸ்தானத்தின் அங்கீகாரத்தைப் பெறவும் தீபத்தூணில் விளக்கு ஏற்றவும் மாவட்ட நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் எடுத்ததாகவும், தமது அதிகாரத்திற்கு உட்பட்டு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாகவும் மாவட்ட ஆட்சியர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கின் பின்னணி: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவைத் தமிழக அரசு மற்றும் அதிகாரிகள் மீறியதாகக் கூறி நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனுதாரர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியரின் இந்த 17 பக்க அறிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

