திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவுக்கு சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவுகள் வெளியானதாகக் கூறப்படும் நிலையில், அவரது குடியிருப்பு முகாம் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று மாலை கோவில் மலைப்பகுதியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இருப்பினும், உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவின்படி மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு தீபம் ஏற்றப்படவில்லை.
இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், பாரம்பரிய நடைமுறை மற்றும் ஆகம விதிகளைப் பின்பற்றி வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே மகா தீபம் ஏற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று இரவு திருப்பரங்குன்றம் பகுதியில் பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தீபம் ஏற்றப்பட்ட இடம் தொடர்பாகப் பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்புகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தச் சூழலில், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சிலர் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, இன்று பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, மதுரை நத்தம் சாலையில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியரின் குடியிருப்பு முகாம் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் இரு இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி அதிரடி முறையீடு!
