Homeசெய்திகள்தமிழ்நாடு“கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை; திரிஷா பேரவை பாஜகவின் மூன்றாவது...

“கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை; திரிஷா பேரவை பாஜகவின் மூன்றாவது கிளை” – ரஞ்சனா நாச்சியார் விமர்சனம்!

-

- Advertisement -

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகப் புகார் எழுந்துள்ள தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக பெண் நிர்வாகியும் நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், நடிகை திரிஷா பெயரில் பேரவை தொடங்கப்பட்டிருப்பது பாஜகவின் மூன்றாவது கிளை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து ரஞ்சனா நாச்சியார் தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளதாகத் தெரிவித்த அவர், வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் சிறுமிகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத அரசாக தவெக அரசு இருப்பதாக விமர்சித்தார்.

ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களிலேயே ஒரு மாவட்ட ஆட்சியருக்குப் பாலியல் அச்சுறுத்தல் ஏற்படும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளதாகக் குற்றம்சாட்டிய ரஞ்சனா நாச்சியார், அருள் விக்னேஷ் மீது அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

எம்.எல்.ஏ பதவி விலக வேண்டும்

தேர்தல் பிரசாரத்தின்போது தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் விஜய் போட்டியிடுவதாகக் கூறியதைச் சுட்டிக்காட்டிய அவர், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் விஜய் தவறு செய்துவிட்டதாக விமர்சித்தார்.

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கார்த்திகா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ஒப்பிட்டுப் பேசிய அவர், தற்போது அருள் விக்னேஷுக்கு சம்மன் அனுப்பியிருப்பது அவரைத் தப்பிக்க வைப்பதற்கான வழியாக இருப்பதாகக் குற்றம்சாட்டினார்.

அருள் விக்னேஷ் தாமாகவே தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தார்.

திரிஷா பேரவை குறித்து விமர்சனம்

நடிகை திரிஷா பெயரில் பேரவை தொடங்கப்பட்டிருப்பது குறித்துப் பேசிய ரஞ்சனா நாச்சியார், இதற்கு திரிஷா இதுவரை மறுப்பு தெரிவிக்காமல் இருப்பதாகக் கூறினார். மேலும், திரிஷா பேரவை தொடங்கப்பட்டிருப்பது பாஜகவின் மூன்றாவது கிளை என்றும் விமர்சித்தார்.

தவெக மகளிர் அணியினர், திரிஷாவுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் மட்டுமே வெளியே வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்திலும் விமர்சனம்

திருப்பரங்குன்றம் மலை தீபம் தொடர்பான விவகாரத்தில் சர்ச்சைக்குரிய இடம் சர்வே கல் என்று கூறப்படுவதாகக் குறிப்பிட்ட ரஞ்சனா நாச்சியார், மதக் கலவரத்தைத் தூண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டினார்.

பாரம்பரியமாக நடைபெறும் இந்த விவகாரத்தில் தவெக அரசு நீதிமன்றத்தில் முறையாக வாதாடியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்துக்களின் வாக்குகளும் முஸ்லிம்களின் வாக்குகளும் தேவைப்படுவதால் தவெக அரசுக்கு இந்த விவகாரம் சவாலாக இருப்பதாகவும் ரஞ்சனா நாச்சியார் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ மீதான புகார் – விசாரணையைத் தொடங்கிய திருப்பூர் எஸ்.பி. சிருஷ்டி சிங்!

MUST READ