எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுப்பதில் வேகமாகச் செயல்படும் தவெக அரசு, தனது கட்சியினருக்கு எதிரான புகார்கள் வரும்போது தாமதம் காட்டுவதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் இரவு உடையிலேயே கைது செய்யப்பட்டது வரை, திமுகவின் ‘Gen Z DMK’ அமைப்பில் செயல்பட்ட இளைஞர்கள் எனத் தன்னைக் கேள்வி கேட்ட பலரும் இரவு, அதிகாலை எனப் பாராமல் கைது செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுப்பதில் வேகம் காட்டும் அரசு, தற்போது தனது கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையிலும், அவரைக் கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாகக் கனிமொழி தெரிவித்துள்ளார்.
பெண்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி வாக்கு கேட்ட தவெக அரசு, தனது கட்சி எம்.எல்.ஏ. மீதான புகாரில் ஏன் நடவடிக்கை எடுக்கத் தாமதிக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரைக் கைது செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் சூழலில் கனிமொழியின் இந்த விமர்சனம் வெளியாகியுள்ளது.
