அரியலூர் மாவட்டம் கீழவெளி அரசுப் பள்ளியில் பட்டியலின ஆசிரியர்கள் பயன்படுத்தி வந்த ஓய்வறையில் மனிதக் கழிவு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு பள்ளிக்கல்வித் துறை இயக்குநருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கீழவெளி அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் சாதி அடிப்படையில் இரு பிரிவுகளாகச் செயல்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் பயன்படுத்தி வந்த ஓய்வறையில் மர்ம நபர்கள் மனிதக் கழிவை வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்ட மாநில எஸ்.சி., எஸ்.டி. நல ஆணையத் தலைவர் நீதிபதி எம்.வி. முரளிதரன் தலைமையிலான அமர்வு, தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த அமர்வில் ஆணைய உறுப்பினர்கள் ஆனந்தராஜா, இளஞ்செழியன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இரு துறைகளுக்கு உத்தரவு:
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் உரிய விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் விரிவான அறிக்கையை டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாகக் காவல்துறை இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஜெயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) அறிக்கை தாக்கல் செய்யவும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
பள்ளி போன்ற கல்வி நிறுவனங்களிலேயே ஆசிரியர்களுக்கு இடையே சாதிப் பாகுபாடு நிலவுவதாக எழுந்துள்ள புகாரும், ஓய்வறையில் மனிதக் கழிவு வீசப்பட்ட சம்பவமும் கல்வி வட்டாரத்தில் கவலையையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
ஆணையத்தின் விசாரணை உத்தரவைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித் துறை மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
200 நாட்களில் ரூ.1.73 லட்சம் கோடி முதலீடு; சுமார் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் – தமிழக அரசு தகவல்!
