Homeசெய்திகள்இந்தியாபீகாரில் ரூ.80 கோடி செலவில் பிரம்மாண்ட திருமணம்: வைரல் வீடியோக்களால் சர்ச்சை!

பீகாரில் ரூ.80 கோடி செலவில் பிரம்மாண்ட திருமணம்: வைரல் வீடியோக்களால் சர்ச்சை!

-

- Advertisement -

பீகார் மாநிலம் மொகாமா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனந்த் சிங்கின் இளைய மகள் சிவாங்கி சிங்கிற்கும், ரிஷிகேஷ் குமாருக்கும் நடைபெற்ற திருமணம், அதன் பிரம்மாண்ட ஏற்பாடுகள் மற்றும் அங்கு நிகழ்ந்த பரபரப்பான சம்பவங்களால் நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.

 

பாட்னா மாவட்டத்தில் உள்ள அனந்த் சிங்கின் பூர்வீக கிராமமான நட்வான் பகுதியில் நவம்பர் 25-ஆம் தேதி இந்தத் திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமார் 4 முதல் 5 லட்சம் பேருக்கு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விழாவுக்காகப் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டதுடன், முக்கியப் பிரமுகர்கள் வருவதற்காகத் தற்காலிக ஹெலிபேடுகளும் அமைக்கப்பட்டிருந்தன.

150 வகை உணவுகள்; பிரம்மாண்ட விருந்து!

திருமண விருந்தில் 150-க்கும் மேற்பட்ட வகையான உணவுகள் பரிமாறப்பட்டதாகக் கூறப்படுகிறது. பீகாரின் பாரம்பரிய உணவுகளான லிட்டி சோக்கா முதல் தென்னிந்திய உணவுகள், சாட் வகைகள், பீட்சா, பாஸ்தா உள்ளிட்ட பல்வேறு உணவுகள் இடம்பெற்றிருந்தன. சுமார் 500 சமையல் கலைஞர்கள் உணவு தயாரிப்பில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மணமகளுக்குப் பல கோடி ரூபாய் மதிப்பிலான லேண்ட் ரோவர் டிஃபென்டர் சொகுசு கார் பரிசாக வழங்கப்பட்டதாகவும், குடும்பத்தின் மற்றொரு நிகழ்வை முன்னிட்டு பிஎம்டபிள்யூ காரும் பரிசளிக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குதிரைப் பந்தயத்தால் போக்குவரத்து பாதிப்பு!:

திருமண விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் குதிரைப் பந்தயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பீகார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. போட்டியில் வெற்றி பெறுபவருக்கு மஹிந்திரா தார் கார் பரிசாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் போட்டியைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். கூட்டத்தில் இருந்த சில இளைஞர்கள் போட்டியைப் பார்ப்பதற்காக மரங்கள் மற்றும் உயரழுத்த மின் கோபுரங்கள் மீது ஏறினர்.

இதனால் பாதுகாப்பு அச்சம் ஏற்பட்டதுடன், அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் நிலவியது. கூட்ட நெரிசல் காரணமாகக் குதிரைப் பந்தயம் பாதிக்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பணமழை வீசியதாகப் பரவிய வீடியோ!:

திருமண விழாவில் நடைபெற்ற இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளின்போது கலைஞர்கள் மீது பணம் வீசப்பட்டதாகக் கூறப்படும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவின. தரையில் சிதறிக்கிடந்த பணத்தைச் சிலர் சேகரிக்கும் வீடியோவும் வைரலானது.

ஆனால், அந்த வீடியோ அனந்த் சிங்கின் மகள் திருமணத்தில் எடுக்கப்பட்டது அல்ல என்று இந்தியா டுடே உண்மைச் சரிபார்ப்பில் தெரிவித்துள்ளது.

அந்தக் காட்சி செப்டம்பர் மாதம் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்துக்குப் பிறகு எடுக்கப்பட்டது என்றும், தரையில் இருந்தவை போலி ரூபாய் நோட்டுகள் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உணவுத் தட்டுகளுக்காகத் தள்ளுமுள்ளு! :

மறுபுறம், திருமண விருந்தில் உணவுத் தட்டுகள் போதிய அளவில் கிடைக்காததால் கூட்டத்தினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சிலர் மேடையிலிருந்து தட்டுகளைப் பொதுமக்கள் இருக்கும் பகுதிக்கு வீசியதாகவும், அவற்றைப் பிடிக்க மக்கள் முண்டியடித்ததாகவும் வெளியாகியுள்ள வீடியோ காட்சிகள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

**திருமணப் பந்தலுக்குள் புகுந்த பாம்பு!**

திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, விருந்தினர்கள் அமர்ந்திருந்த பந்தலுக்குள் திடீரெனப் பாம்பு புகுந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அச்சமடைந்து பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ஓர் இளைஞர் பாம்பைப் பிடித்து வெளியே எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தின் வீடியோவும் இணையத்தில் பரவியது. 

இவ்வாறு ஆடம்பரமான ஏற்பாடுகள் ஒருபுறம், கூட்ட நெரிசல், பாதுகாப்பு அச்சம், உணவு விநியோகக் குழப்பம் உள்ளிட்ட சம்பவங்கள் மறுபுறம் என அனந்த் சிங்கின் மகள் திருமணம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கிறிஸ்துமஸ் – புத்தாண்டு பம்பர் லாட்டரி அறிமுகம்! முதல் பரிசு ரூ.25 கோடி; டிக்கெட் விலை ரூ.450

 

MUST READ