திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 121 கிலோ எடையிலான தங்க நகைகளை காணிக்கையாக வழங்கிய வர்தமான் ஜெயினை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெகுவாகப் பாராட்டியுள்ளார். ஏழுமலையான் மீதான பக்தி, விசுவாசம் மற்றும் நம்பிக்கையின் வெளிப்பாடாக இந்தக் காணிக்கை அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரூ.206 கோடி மதிப்பில் தங்க ஆபரணங்கள்
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நகைகள் காணிக்கையாக வழங்கிய வர்தமான் ஜெயினுடன் இணைந்து முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
“நான் சிறு வயது முதலே ஏழுமலையான் கோயிலுக்கு வந்து கொண்டிருக்கிறேன். எனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் முதல்முறையாக இவ்வளவு பெரிய அளவிலான காணிக்கையை வர்தமான் ஜெயின் எனது மூலமாக ஏழுமலையானுக்கு வழங்கியுள்ளார்.
திருமலை என்றாலே பக்தி, விசுவாசம், நம்பிக்கை நிறைந்த இடமாகும். இந்து கோயில்களில் திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோயில் தனிச்சிறப்பு வாய்ந்ததாக விளங்குகிறது. கடவுளின் உத்தரவுப்படியே 121 கிலோ எடையில் நகைகள் தயாரிக்கத் தங்கத்தை வழங்கியதாக நன்கொடையாளர் தெரிவித்துள்ளார்.
அவர் எந்தப் பணியைத் தொடங்கினாலும் சுவாமியை நினைத்தே தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தனக்குக் கிடைத்த லாபத்தில் ஒரு பகுதியை சுவாமியின் உத்தரவுப்படி காணிக்கையாக வழங்கியுள்ளார். அதன்படி, 106 கிலோ எடையிலான தங்க நகைகள் வெங்கடேஸ்வர சுவாமிக்கும், 15 கிலோ எடையிலான தங்கப் புடவை திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
260 கேரட் வைரங்கள் பதிக்கப்பட்ட இந்த ஆபரணங்கள், மிகவும் கலைநயத்துடன் ரூ.206 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தக் காணிக்கை ஆபரணங்களின் மதிப்பை விட, சுவாமி மீதான நம்பிக்கையின் உயர்வையே வெளிப்படுத்துகிறது” என்றார்.
மன்னர்கள் காலம் முதல் தொடரும் காணிக்கை மரபு
மேலும் பேசிய சந்திரபாபு நாயுடு, பல்லவர்கள், சோழர்கள், சேரர்கள் காலத்தில் ஏழுமலையான் கோயில் படிப்படியாக வளர்ச்சி பெற்றதாகக் குறிப்பிட்டார். அதன்பிறகு விஜயநகரப் பேரரசின் மன்னர் கிருஷ்ணதேவராயர் ஆட்சிக் காலத்தில் ஏராளமான காணிக்கைகளும் நன்கொடைகளும் வழங்கப்பட்டதாகவும், கோயிலின் வளர்ச்சிக்கு அவர் முக்கியப் பங்காற்றியதாகவும் தெரிவித்தார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் கோயிலின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகக் கூறிய அவர், மன்னர்கள் காலம் முதல் தற்போதுவரை ஏழுமலையான் மீதான பக்தியும் நம்பிக்கையும் காரணமாக பக்தர்கள் தொடர்ந்து காணிக்கைகளை வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.
ஏழுமலையான் என்னைக் காப்பாற்றினார்
“கலியுகத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஏழுமலையான், யாராவது தவறு செய்தால் அதற்கேற்ப தண்டனையையும் இந்தப் பிறவியிலேயே வழங்குகிறார். இதை நானே நேரில் பார்த்திருக்கிறேன்.
என்னைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இதே திருப்பதியில் கண்ணிவெடி வைத்து தகர்க்க முயன்றனர். அந்த ஆபத்தில் இருந்து ஏழுமலையான் தான் என்னைக் காப்பாற்றி மறுபிறவி அளித்தார். இதுபோன்ற நல்ல செயல்களை என் மூலமாகச் செய்ய வைத்துள்ளார்” என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
பசு, வேதம் பாதுகாப்புக்கு முன்னுரிமை
தொடர்ந்து தேவஸ்தான நிர்வாகத்துக்குப் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கிய அவர், ஏழுமலையான் மீதான பக்தி மற்றும் நம்பிக்கையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பசுக்கள் மற்றும் வேதங்களைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், ஸ்ரீவாரி சேவை தன்னார்வ அமைப்பை மேலும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்துக்கள் அதிகம் வாழும் நாடுகளில் வெங்கடேஸ்வர சுவாமி கோயில்கள் கட்டப்படும் என்றும், இந்தியாவின் அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், சுவாமியின் பெயரில் செயல்படுத்தப்படும் வித்யா தானம் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார்.
திருமலையில் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க நடவடிக்கை
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வனப்பகுதிகளை அதிகரிக்க வேண்டும் என்றும், திருமலையில் மின்சார வாகனப் பயன்பாட்டை விரிவுபடுத்த வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
இந்த ஆண்டு எல் நினோ தாக்கம் காரணமாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஆந்திராவின் அந்திரிநிவா திட்டத்தின் மூலம் கல்யாணி அணைக்குத் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். திருப்பதியில் பாலாஜி நீர்த்தேக்கமும் கட்டப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
“1999-ம் ஆண்டு எனது ஆட்சிக் காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது, கோயிலை மூட வேண்டிய நிலை ஏற்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது 49 நாட்களில் திருப்பதியில் இருந்து திருமலைக்குக் குழாய் அமைத்து தண்ணீர் கொண்டு வந்தோம்.
தற்போது எல் நினோ பாதிப்பால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால், தேவைக்கேற்ப இரண்டாவது குழாய் அமைத்து திருமலைக்குத் தண்ணீர் கொண்டு வரப்படும்” என்றார்.
ஆன்மீகப் பணிகளுக்கு நன்கொடை வழங்க அழைப்பு
பணம் மற்றும் பொருளாதாரம் நிரந்தரமானவை அல்ல; ஆனால் மன அமைதிக்கு பக்தி மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்ட சந்திரபாபு நாயுடு, ஜெயின் தம்பதியினர் தாங்கள் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை சுவாமிக்கு வழங்கியுள்ளதாகப் பாராட்டினார்.
இதேபோல் வசதி படைத்தவர்கள் பிறருக்கும் உதவ வேண்டும் என்றும், ஆன்மீகப் பணிகளிலும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
தொழில்நுட்பம், ஆன்மீகம், சேவை ஆகியவற்றை இணைத்து அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கடந்த இரண்டரை ஆண்டுகளில் மாநிலத்திற்குப் பெரிய அளவில் முதலீடுகளும், ஏழுமலையான் கோயிலுக்குப் பெருமளவிலான நன்கொடைகளும் கிடைத்திருப்பது சுவாமியின் அருளாசியே என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
