இந்தியாவின் பால் உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளில் 69.41 சதவீதம் அதிகரித்து, 247.87 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி நாடாக இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

உலகளாவிய பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு
2014-15-ம் ஆண்டில் 146.31 மில்லியன் டன்னாக இருந்த இந்தியாவின் பால் உற்பத்தி, 2024-25-ம் ஆண்டில் 247.87 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. உலகளாவிய பால் உற்பத்தியில் இந்தியா கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கை வழங்குகிறது.
நாட்டின் மொத்த பால் உற்பத்தியில் உத்தரப் பிரதேசம் 15.66 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான் 14.82 சதவீதம், மத்தியப் பிரதேசம் 9.12 சதவீதம், குஜராத் 7.78 சதவீதம், மகாராஷ்டிரா 6.71 சதவீதம் என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த ஐந்து மாநிலங்களும் இணைந்து நாட்டின் மொத்த பால் உற்பத்தியில் 54.09 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன.
தனிநபர் பால் கிடைக்கும் அளவு அதிகரிப்பு
நாட்டில் தனிநபருக்கு தினசரி கிடைக்கும் பாலின் அளவும் அதிகரித்துள்ளது. 2014-15-ம் ஆண்டில் நாளொன்றுக்கு 319 கிராமாக இருந்த பால் கிடைக்கும் அளவு, 2024-25-ம் ஆண்டில் 485 கிராமாக உயர்ந்துள்ளது.
மேலும், ஒரு கால்நடையின் சராசரி ஆண்டு பால் உற்பத்தித் திறன் 1,640 கிலோவிலிருந்து 2,800 கிலோவாக அதிகரித்துள்ளது.
8.5 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு வாழ்வாதாரம்
இந்தியாவின் பால்வளத் துறை சுமார் 8.5 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது. இத்துறையில் பணியாற்றுபவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பால்வளக் கூட்டுறவு கட்டமைப்பில் 22 பால் கூட்டமைப்புகள், 241 மாவட்ட கூட்டுறவு பால் ஒன்றியங்கள் மற்றும் 25 பால் உற்பத்தியாளர் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. 12 மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள 25 பால் உற்பத்தியாளர் அமைப்புகளில் 18 அமைப்புகள் முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்படுகின்றன.
நாளொன்றுக்கு 690.90 லட்சம் கிலோ பால் கொள்முதல்
2026 அக்டோபர் 31-ம் தேதி நிலவரப்படி, பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நாளொன்றுக்கு 690.90 லட்சம் கிலோ பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பால் கொள்முதலை 50 சதவீதம் அதிகரிக்கும் நோக்கில் ‘வெண்மை புரட்சி 2.0’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 24,097 புதிய பால் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பால் பொருட்கள் ஏற்றுமதி மூலம் 407.12 மில்லியன் டாலர் வருவாய்
கால்நடைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பால்வள உற்பத்தியை அதிகரிக்கவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கால்நடைகளுக்கு மருத்துவச் சேவை வழங்குவதற்காக நாடு முழுவதும் 4,019 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் சுமார் 1.5 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
மேலும், 2025-26-ம் ஆண்டில் இந்தியா 97,524.82 மெட்ரிக் டன் பால் பொருட்களை ஏற்றுமதி செய்து, 407.12 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டியுள்ளது.
நவம்பர் 26 – தேசிய பால்வள தினம்
இந்தியாவின் வெண்மை புரட்சிக்கு முக்கியப் பங்காற்றிய டாக்டர் வர்கீஸ் குரியனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் தேதி தேசிய பால்வள தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் பால் உற்பத்தி வளர்ச்சிக்கும், கிராமப்புற பொருளாதாரத்திற்கும் பங்களித்து வரும் விவசாயிகள் மற்றும் பால்வளத் தொழிலாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் நாளாக தேசிய பால்வள தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி: 1 கோடி சிறுமிகளுக்கு செலுத்தி இந்தியா சாதனை!
