சென்னை எண்ணூரில் அமைந்துள்ள காமராஜர் துறைமுகத்தில் ரூ.4,288.26 கோடி மதிப்பீட்டில் இரண்டாவது சரக்கு முனையம் அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (நவம்பர் 25, 2026) நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் இதற்கான முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ரூ.4,288.26 கோடியில் புதிய சரக்கு முனையம்!
காமராஜர் துறைமுகத்தின் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த இரண்டாவது சரக்கு முனையம் அமைக்கப்பட உள்ளது.
பொது – தனியார் கூட்டாண்மை (PPP) அடிப்படையில், வடிவமைத்தல், கட்டமைத்தல், நிதியளித்தல், இயக்குதல் மற்றும் ஒப்படைத்தல் (DBFOT) முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான மொத்த திட்ட மதிப்பீடு ரூ.4,288.26 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 20 லட்சம் கண்டெய்னர்களைக் கையாளும் திறன்!
புதிதாக அமைக்கப்பட உள்ள சரக்கு முனையம் ஆண்டுக்கு 20 லட்சம் 20 அடி அளவிலான கண்டெய்னர்களை (TEUs) கையாளும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் காமராஜர் துறைமுகத்தின் சரக்குக் கையாளும் திறன் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு கட்டங்களாகப் பணிகள்!
இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக ரூ.2,429 கோடி மதிப்பீட்டில் 11 லட்சம் கண்டெய்னர்களைக் கையாளும் திறன் கொண்ட முனையம் அமைக்கப்பட உள்ளது. இரண்டாம் கட்டமாக ரூ.1,858.94 கோடி மதிப்பீட்டில் மேலும் 9 லட்சம் கண்டெய்னர்களைக் கையாளும் திறன் உருவாக்கப்பட உள்ளது.
ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்திற்கு புதிய உந்துசக்தி!
‘கடல்சார் அமிர்த காலத் தொலைநோக்குத் திட்டம் 2047’-ன் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த விரிவாக்கப் பணிகள், தென்னிந்தியாவின் கடல்சார் வர்த்தக வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரக்குகளைக் கையாளும் திறன் அதிகரிப்பதன் மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் மேம்படுவதுடன், சரக்குப் போக்குவரத்து நெரிசலும் குறைய வாய்ப்புள்ளது.
மேலும், துறைமுகத்தைச் சார்ந்த தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, சரக்குப் போக்குவரத்துத் துறை விரிவாக்கம் மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் ஆகியவற்றுக்கும் இந்தத் திட்டம் உந்துசக்தியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை காமராஜர் துறைமுகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இந்த இரண்டாவது சரக்கு முனையத் திட்டம் முக்கிய மைல்கல்லாக அமையும்.
