Homeசெய்திகள்இந்தியாஆசிய சக்திவாய்ந்த நாடுகள் : இந்தியா-3-வது இடம்; மோடி 2-வது இடம்!

ஆசிய சக்திவாய்ந்த நாடுகள் : இந்தியா-3-வது இடம்; மோடி 2-வது இடம்!

-

- Advertisement -

ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தைத் தக்கவைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லோவி இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான ஆசியா பவர் இன்டெக்ஸ் (Asia Power Index) அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிய பிராந்தியத்தின் செயல்திறன் மிக்க தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

முதல் இரண்டு இடங்களில் அமெரிக்கா, சீனா:

லோவி இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா 2-வது இடத்திலும் உள்ளன. இந்தியா 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஜப்பான் 4-வது இடத்திலும், ரஷ்யா 5-வது இடத்திலும் உள்ளன.

இந்தியாவின் ஒட்டுமொத்த சக்தி மதிப்பெண் 40.5 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.5 புள்ளிகள் அதிகரித்துள்ளது.

27 நாடுகள், 131 குறியீடுகள் அடிப்படையில் ஆய்வு:

ஆசியா பவர் இன்டெக்ஸ் ஆய்வில் 27 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. பொருளாதார மற்றும் ராணுவ வலிமை, நாட்டின் மீள்திறன், எதிர்கால வளங்கள், ராஜதந்திர செல்வாக்கு, பொருளாதார உறவுகள் உள்ளிட்ட எட்டு முக்கியப் பிரிவுகளின் கீழ் 131 குறியீடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டின் ஒட்டுமொத்த சக்தி மதிப்பெண் கணக்கிடப்பட்டு தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

ராஜதந்திர செல்வாக்கில் இந்தியாவின் முன்னேற்றம்:

இந்தியாவின் ராஜதந்திர செல்வாக்கு மதிப்பெண் 70.3 ஆக உள்ளது. இது இந்தியாவின் வலுவான செயல்பாட்டுப் பிரிவாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய உறவுகள், கலாசாரச் செல்வாக்கு உள்ளிட்ட அம்சங்களில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது.

இந்தியாவின் கலாசாரச் செல்வாக்கு மதிப்பெண் 43.8 ஆகவும், எதிர்கால வளங்கள் மதிப்பெண் 56.2 ஆகவும் உயர்ந்துள்ளன.

பிரதமர் மோடிக்கு 2-வது இடம்:

ஆசிய பிராந்தியத்தின் செயல்திறன் மிக்க தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங் முதலிடத்தில் உள்ளார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பிரதமர் மோடியின் தரவரிசை மூன்று இடங்கள் முன்னேறியுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

பொருளாதார வலிமையில் சில பின்னடைவுகள்:

இந்தியாவின் ஒட்டுமொத்த சக்தி மதிப்பெண் உயர்ந்திருந்தாலும், பொருளாதாரத் திறன் பிரிவில் சிறிய சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் இந்தியாவின் மதிப்பெண் 26.4 ஆக உள்ளது.

ரூபாயின் மதிப்பு சரிவு, சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார மதிப்பீட்டு முறையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டில் ஏற்பட்ட குறைவு ஆகியவை இதற்கான காரணங்களாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இருப்பினும், எதிர்கால வளங்கள், பாதுகாப்பு உறவுகள் மற்றும் கலாச்சாரச் செல்வாக்கு ஆகிய பிரிவுகளில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது.

சீனாவுடன் தொடரும் சக்தி இடைவெளி:

இந்தியா ஆசியாவின் 3-வது சக்திவாய்ந்த நாடாகத் தொடர்ந்து இருந்தாலும், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒட்டுமொத்த சக்தி வேறுபாடு இன்னும் அதிகமாக இருப்பதாக லோவி இன்ஸ்டிடியூட் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கு வளர்ந்து வருவதையும், பல்வேறு துறைகளில் அதன் பங்களிப்பு அதிகரித்து வருவதையும் இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.

இந்தியாவின் கடல்சார் வளர்ச்சிக்கு ஆந்திரா தான் தலைமை தாங்கும்! – விசாகப்பட்டினத்தில் மத்திய இணை அமைச்சர் பபித்ரா மார்கரிட்டா பெருமிதம்

MUST READ