Homeசெய்திகள்இந்தியாஆன்மீக மரபுகளை அறியாதவர்கள் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.! – ராகுல் காந்தி கடும் தாக்கு

ஆன்மீக மரபுகளை அறியாதவர்கள் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.! – ராகுல் காந்தி கடும் தாக்கு

-

- Advertisement -

இந்தியாவின் ஆன்மீக மற்றும் மத மரபுகள் குறித்து பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஆழமான புரிதல் இல்லாமல் செயல்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், அன்பு, ஆன்மீகம் மற்றும் இந்து மதத்தின் உண்மையான தத்துவங்கள் குறித்தும் அவர் தனது சமூக வலைதளப் பதிவுகளில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் சர்ச்சைப் பேச்சு!

கடந்த 16-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை நூலான ‘Belonging: A Journey of Love’ வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசினார்.

அப்போது தனது சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட அவர், உணவு உண்ணும் நேரங்களில் தனது தாயார் சோனியா காந்தி, தந்தை ராஜீவ் காந்தியின் மடியில் அமர்ந்திருப்பதைப் பார்த்ததாகக் குறிப்பிட்டார்.

பின்னர் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்றபோது, அவர்களது தாய்மார்கள் ஏன் அவ்வாறு அமர்வதில்லை என்று கேள்வி எழுப்பியதாகவும் தனது பேச்சில் தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்திக்கு பா.ஜ.க. தலைவர்கள் கண்டனம்!

ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பொது நிகழ்ச்சியில் தனது தாயாரைப் பற்றிப் பேசிய விதம் அவருக்கே தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் ஹனிர்பன் கங்கூலியும் ராகுல் காந்தியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

சிவன் – பார்வதி படத்தைப் பகிர்ந்து பதிலடி!

இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், சிவபெருமானின் மடியில் பார்வதி அமர்ந்திருக்கும் படத்தை ராகுல் காந்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார்.

அதில், அச்சம், கோபம் மற்றும் வெறுப்பு ஆகியவை பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களின் மனங்களில் பின்னப்பட்ட வலையாக இருப்பதாகக் குறிப்பிட்டார். இந்த உணர்வுகள் அவர்களை அன்பை உணர்வதிலிருந்தும், அதை வெளிப்படுத்துவதிலிருந்தும் தடுத்து நிறுத்துவதாகவும் தெரிவித்தார்.

மேலும், உண்மையான இந்து என்ற முறையில் அவர்களை அந்த வலையிலிருந்து விடுவிப்பது தனது கடமை என்றும், அதன் மூலமாகவே அவர்கள் வாழ்க்கையில் அன்பின் அழகை உணர முடியும் என்றும் பதிவிட்டார்.

அர்த்தநாரீஸ்வரர் சிற்பத்தைச் சுட்டிக்காட்டி விமர்சனம்!

தொடர்ந்து மற்றொரு பதிவில், இந்தியாவின் ஆன்மீக மற்றும் மத மரபுகளை ஆழமாகப் புரிந்துகொள்ள முயற்சிக்கும்போதுதான் அவற்றின் உண்மையான அர்த்தத்தை அறிய முடியும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

இதற்காக மகாராஷ்டிர மாநிலம் காராபுரி தீவில் அமைந்துள்ள புகழ்பெற்ற எலிபன்டா குகைக் கோயிலில் உள்ள சிவன் – பார்வதி இணைந்த அர்த்தநாரீஸ்வரர் சிற்பத்தின் படத்தையும் பகிர்ந்தார்.

அந்தப் பதிவில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அருவருக்கத்தக்கவர்கள், பேராசை கொண்டவர்கள், சாதியவாதிகள் மற்றும் ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவர்கள் எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தியின் இந்தப் பதிவுகள் அரசியல் வட்டாரங்களில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் தொடங்கிய சர்ச்சை, தற்போது இந்து மதத்தின் ஆன்மீக மரபுகள் மற்றும் அரசியல் அமைப்புகளின் அணுகுமுறை குறித்த விவாதமாக மாறியுள்ளது.

வன்முறையின் வடுக்கள் ஆறுவதற்குள் விஷச்சாராயத்தின் கோர முகம்: மணிப்பூர் உயிரிழப்புகளுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்!

MUST READ