ஜவுளித் தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ரூ.10,600 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தனியார் நைலான் இழை உற்பத்தி ஆலையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
நைலான் இழை உற்பத்தி ஆலையில் ஆய்வு
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் வாகன டயர்களுக்குப் பயன்படுத்தப்படும் நைலான் இழைகளைத் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, ஆலையின் உற்பத்தித் திறன், தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
ஜவுளித் தொழில்நுட்பத்துக்கு ரூ.10,600 கோடி ஒதுக்கீடு
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கிரிராஜ் சிங், தொழில்நுட்ப ஜவுளித் துறையை (Technical Textiles) ஊக்குவிப்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி ரூ.10,600 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகக் கூறினார்.
மேலும், இத்துறையில் முதலீடுகளை அதிகரிக்கவும், புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். அதன் ஒரு பகுதியாகவே கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் நைலான் இழை உற்பத்தி ஆலையில் ஆய்வு மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு
இதற்கிடையே, ஜவுளி மற்றும் டயர் தொழிற்சாலைகளின் செயல்பாடுகளால் அப்பகுதியில் ஏற்படுவதாகக் கூறப்படும் சுகாதாரச் சீர்கேடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
ஆனால், இந்தக் கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
ஆசிய சக்திவாய்ந்த நாடுகள் : இந்தியா-3-வது இடம்; மோடி 2-வது இடம்!
